கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே பவானி ஆற்றில் மிதந்து வந்த மூன்று சாக்கு மூட்டைகளில் இருந்து இளம் பெண் மற்றும் 5 வயது சிறுமியின் உடல் பாகங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அட்டப்பாடி பவானி ஆற்றின் சீரக்கடவு படித்துறை பகுதியில் நேற்று முன்தினம் மாலை 3 சாக்கு மூட்டைகள் மிதந்து வந்துள்ளன. அப்போது அப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள், சாக்கு மூட்டைகள் குறித்து சந்தேகமடைந்து அவற்றை கரைக்கு கொண்டு வந்துள்ளனர். பின்னர் சாக்கு மூட்டைகளை பிரித்துப் பார்த்தபோது, சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் மற்றும் 5 வயது சிறுமியின் தலைகள் இருப்பது தெரியவந்துள்ளது.
மற்ற இரண்டு சாக்கு மூட்டைகளில் உடல் பாகங்கள் அழுகிய நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள், உடனடியாக அப்பகுதி மக்களின் உதவியுடன் புதூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சாக்கு மூட்டைகளை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. முதற்கட்ட விசாரணையில், இளம்பெண் மற்றும் சிறுமி கொலை செய்யப்பட்டு சுமார் 4 நாட்கள் இருக்கலாம் என தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து மீட்கப்பட்ட உடல் பாகங்கள் திருச்சூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இளம்பெண்ணையும் சிறுமியையும் மர்ம நபர்கள் கொலை செய்து, அவர்களின் உடல்களை துண்டித்து சாக்கு மூட்டைகளில் அடைத்து பவானி ஆற்றில் வீசியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், போலீசார் நடத்திய விசாரணையில் முக்கிய தகவல் ஒன்று தெரியவந்துள்ளது.
ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட சாக்கு மூட்டைகள் கோவையிலிருந்து மளிகைப் பொருட்களை பார்சல் மூலம் அட்டப்பாடி கோட்டத்தரா பகுதியில் உள்ள கடைக்கு கொண்டு வரப்பட்டவை என தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. மீட்கப்பட்டவர்களின் உடல் அடையாளம் மற்றும் பின்னணி குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர் குடும்பத்தினராக இருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இளம்பெண் மற்றும் சிறுமி யார், அவர்களை கொலை செய்தது யார், எதற்காக கொலை நடந்தது என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்