
“அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தை தேய்க்கும் படை” -குறள் 555
கொடுங்கோல் ஆட்சியை பொறுக்க முடியாது தவிக்கும் குடிமக்களின் கண்ணீரே அந்த அரசினை அழிக்கும் படைக்கருவியாகும்.
இந்த குறளுக்கு உதாரணமாக உலகில் எத்தனையோ சர்வாதிகார ஆட்சிகளை நாம் குறிப்பிடலாம், ஹிட்லர், முசோலினி, தொடங்கி வெள்ளை ஏகாதிபத்தியம், காலனித்துவம் இவற்றின் நவீன வடிவமான இன்றைய முதலாளித்துவம், சாதி,மத, இன பாகுபாடுகளின் பொருட்டு மக்களை வஞ்சிக்கும் நவீன அரசுகள் வரை ..
ஆனால் நமக்கு தெரியாத மிக மோசமான ஒரு இனப்படுகொலை 20 ஆம் நூற்றாண்டில் அரங்கேறியுள்ளது. ‘S -21’ என்று சொல்லப்படுகிற இடத்தில் 3 மில்லியன் கம்போடிய மக்களின் ஓலம் இன்றுவரை கேட்டுக்கொண்டே இருக்கிறது.
கெமர் ரூஜ் -ன் துவக்கம்!
1925 ஆம் ஆண்டு தான் 3 மில்லியன் மக்களின் உயிரை குடித்த சலோத் சார் என்ற இயற்பெயரை கொண்ட போல் பாட் பிறந்தார். அந்த சமயம் கம்போடியா நோரோடோம் சிஹானூக் என்ற மன்னரின் முடியாட்சியின் கீழ் பிரெஞ்சு காலணிக்கு உட்பட்டு இருந்தது.
ஓரளவுக்கு வசதிபடைத்த நிலக்கிழாரின் குடும்பத்தில் பிறந்த பாட், பிரான்ஸ் சென்று தனது மேற்படிப்பை பயில்கிறார். அதன் பின்னர் கல்லூரி காலங்களில் கம்யூனிச தத்துவத்தின்பால் ஈர்க்கப்பட்டு சமூக செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். நாளடைவில் கம்போடியாவில் எப்படி கம்யூனிசத்தை வளர்த்தெடுப்பது என்ற சிந்தனையில் ஆழ்கிறார். அதன் விளைவுதான் ‘கெமர் ரூஜ்.
1940 -களில் கம்போடிய நாட்டில் ஒரு குறிப்பிடதக்க அரசியல் மாற்றம் ஏற்படுகிறது, நாடு முழுக்க தனிச்சுதந்திரம் தேடும் வேட்கையோடு பிரஞ்சு ஆட்சிக்கு எதிரான அலைகள் எழும்புகின்றன, மேலும் போரில் தோல்வியுற்றபின் ஜப்பானியர்களும் நாட்டை விட்டு விரட்டப்படுகின்றனர்.
இதுபோன்றோரு சூழலில்தான் மெல்ல மெல்ல ‘கெமர் ரூஜ்’ என்று சொல்லப்படுகிற ‘communist party of Kampuchea’ ஆயுதப்படை வளர்ச்சி அடைகிறது.
1970 இல் அமெரிக்கா, இளவரசர் நோரோடோம் சிஹான் ஆட்சியை ராணுவத்தை கொண்டு கவிழ்த்தது.. வேறு வழி இல்லாமல் கெமர் ரூஜ் அமைப்புடன் அரசியல் கூட்டணி வைத்தார். இதன் விளைவு மிக மோசமாக இருக்கும் என ஒருவரும் அறிந்திருக்க மாட்டார்கள். இந்த ஆட்சி மாற்றம் உள்நாட்டு போருக்கு வழி வகுத்தது ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக கெமர் ரூஜ் கிராமப்புற மக்களிடையே பெரும் ஆதரவை பெற்றார். இறுதியாக 1975 இல் தலைநகரான புனோம் பென்னை கெமர் ரூஜ் படைகள் கைப்பற்றியது.
ஹிட்லருக்கு நிகரான படுகொலை!
“கம்போடிய மக்கள் மேற்கத்திய நாடுகளின் தன்மையால் மிகவும் கறைபடிந்துள்ளனர்” என்று நினைத்த பாட் ‘தூய்மை’ படுத்துதல் எனும் பெயரில் பெரும் அவல செயல்களை மேற்கொண்டார்.
‘எந்த ஒரு கொள்கையின் தீவிரத் தன்மையும் மக்களை அழிவை நோக்கியே கொண்டு செல்லும்’ அதற்கு பெரும் உதாரணம் தான் பாட்.
தனது சித்தாந்தத்தின் தீவிர தன்மையால் கம்போடியாவில் கல்வியறிவு பெட்ரா மருத்துவர், வக்கீல்,, காவலர் ஆசிரியர் உள்ளிட்ட பலபேரை கைது செய்து சித்ரவதை செய்து கொலை செய்தது ‘கெமர் ரூஜ்’
கம்போடியா முழுக்க முழுக்க விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்க வேண்டும் என விரும்பிய பாட்’ “year zero " என்ற ஒன்றை உருவாக்கி தனது மக்களை உலகின் பிற பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தி, நகரங்களை காலி செய்யவும், பணம், தனியார் சொத்து மற்றும் மதத்தை ஒழிக்கவும், கிராமப்புற கூட்டுகளை அமைக்கவும் தொடங்கினார்
நகர்ப்புறங்களில் வாழ்ந்த மக்களை வலுக்கட்டாயமாக துப்பாக்கி முனையில் கொண்டு வந்து கிராமங்களில் புலம்பெயர் செய்தார்.
நாட்டில் சிந்தனையாளர்கள், படித்தவர்கள் தேடி தேடி கொல்லப்பட்டனர். ‘கண்ணாடி அணிந்ததற்கோ, அல்லது வேறு பாஷைகள் தெரியும் என்பதற்கோ கூட தேடிப்பிடித்து கொல்லப்பட்டனர்.
special centres என்று சொல்லப்படுகிற சித்ரவதை முகாம்களில் கொடுமைப்படுத்தப்பட்டனர்.
இந்த Special centres மையங்களில் மிகவும் பிரபலமானது புனோம் பென், டுவோல் ஸ்லெங்கில் உள்ள S-21 சிறைச்சாலை ஆகும், இது முன்னொரு காலத்தில் பள்ளிக்கூடமாக் இருந்தது. அங்கு நான்கு ஆண்டுகால ஆட்சியில் 17,000 ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் சிறையில் அடைக்கப்பட்டனர், பெண்கள் பலமுறை வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். ஆண்கள் அடித்தே கொல்லப்பட்டனர். இந்த வதை முகாம்களில் இருப்பவர்களுக்கு 3 ஸ்பூன் உணவே வழங்கப்பட்டது. இதனால் பசியிலும், நோயிலும் பலர் இறந்தனர்.
ஹோலோகாஸ்ட என்ற சொல்லப்படுகிற (ஹிட்லர் சித்திரவதைகளில் மிகப்பிரபலம்) வதை முகாம்களில் வெறும் சித்ரவதை மரணம் மட்டுமின்றி மிகவும் அச்சுறுத்தக்கூடிய ஆய்வுகளை மனிதர்கள் உடலில் சோதனை செய்வர் அது S21 -லும் நடந்தது.
இறுதியாக உள்நாட்டு கிளர்ச்சி மற்றும் 1979 ஆம் ஆண்டு வியட்நாமிய துருப்புக்கள் படையெடுப்பின் மூலம் கெமர் ரூஜ் அரசாங்கம் தூக்கியெறியப்பட்டது.
அதன்பிறகே கம்போடியாவில் நடந்த இந்த பயங்கரவாதம் வெளி உலகத்திற்கு தெரியவந்தது. இத்தனை கொடுமைகளை அரங்கேற்றிய போல் பாட் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டார்.
தப்பிப்பிழைத்தவர்கள் தங்கள் கதைகளை வெளி உலகத்திற்கு சொன்னார்கள், பிற்காலத்தில் அந்தப்பகுதியில் நடந்த ஆய்வுகளில் பல மண்டை ஓடுகள், மனித எலும்புகள் கொத்துக்கொத்தாக எடுக்கப்பட்டன. 1980களில் “தி கில்லிங் ஃபீல்ட்ஸ்” என்ற ஹாலிவுட் திரைப்படம் கெமர் ரூஜ்-ஆல் பாதிக்கப்பட்டவர்களின் அவலநிலையை உலகளாவிய கவனத்திற்குக் கொண்டு வந்தது.
இந்த நீண்ட துயரிலிருந்து வெளிவர பல ஆண்டுகளை எடுத்துக்கொண்டது கம்போடியா. ஆனால் ரூஜ் தலைவர்கள் யாரும் பெரிதாக பாதிக்கப்படவில்லை.கெமர் ரூஜ் துணைத் தலைவரும் S-21 இன் தலைவருமான கைங் குயெக் ஈவ், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். கம்போடிய மக்கள் தங்களுக்கு அநீதி இழைத்த நபர்களுக்கு தண்டனை வழக்கும் வாய்ப்பை இழந்தனர்.