மருத்துவ காரணங்களுக்காக மட்டும் பயன்படுத்தப்படும் ஊக்க மருந்துகளை சட்ட விரோதமாக உடற்பயிற்சி கூடங்களுக்கு சப்ளை செய்த இரு இளைஞர்கள் கைது..ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள ஊக்க மருந்துகள் மற்றும் கார் பறிமுதல்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் மருத்துவர்கள் அனுமதியின்றி பயன்படுத்த கூடாத ஊக்க மருந்துகளை உடற்பயிற்சி கூடங்களுக்கு சப்ளை செய்ய முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் வெயிட் லிப்டிங் என்னும் பளு தூக்குதல் பயிற்சி கூடம் நடத்தி வருபவர் செந்தில்குமார் (40). இவரிடம் பயிற்சியாளராக பணியாற்றி வருபவர் சங்கர் (36)..இருவரும் கோவை மாநகர், அன்னூர், அவிநாசி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் ஜிம் எனும் உடற்பயிற்சி கூடங்களுக்கு மருத்துவ விதிகளை மீறி சட்டவிரோதமாக ஊக்க மருந்துகளை சப்ளை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது..
இந்நிலையில், மேட்டுப்பாளையம் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி இன்று மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் காவல்துறை ஆய்வாளர் சின்னகாமணன் தலையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.. அப்போது அவ்வழியே வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்திய போது பத்திற்கு மேற்பட்ட அட்டை பெட்டிகள் நிறைய பல்வேறு வகை மருந்துகள் இருந்ததை கண்டறிந்தனர்..
பிடிப்பட்ட மருந்துகள் குறித்து சுகாதாரத்துறையை சேர்ந்த மருத்துவர்களிடம் போலீசார் விசாரித்த போது பிடிபட்ட டெர்மிலோ, சல்பேப், பெமண்ட், நாப்ரோபென், மெபந்தர்மைன் ஆகிய மருந்துகள் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சையின் போது வலி தெரியாமலும், கடும் ரத்த இழப்பு ஏற்படும் போது அவசர காலத்திற்கு இருக்கும் குறைந்த ரத்தத்தை வேகமாக ஓடும் வகையிலும் பயன்படுத்தப்படும் மருந்துகள் என்றும் இவை மருத்துவர்களின் அனுமதி இன்றி இவற்றை விற்பதோ பயன்படுத்துவதோ கூடாது என்பது தெரிய வந்தது..
இதனையடுத்து, பிடிபட்ட மருந்துகளை பறிமுதல் செய்ததோடு இவற்றை கொண்டு வந்த செந்தில்குமார் மற்றும் சங்கர் ஆகியோரை கைது செய்தனர்..மேலும், அவர்களிடம் இருந்த ரூபாய் 28 ஆயிரம் மற்றும் மூன்று செல்போன்கள், சட்ட விரோதமாக மருந்துகளை கடத்தி வர பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்..
இது போன்ற ஊக்க மருந்துகளை பயன்படுத்தி உடற்பயிற்சி செய்வோர் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்படும் சில நேரங்களில் உயிரிழப்பு கூட ஏற்படும் என தெரிவிக்கும் போலீசார் இது போன்று மருந்துகளை எந்த காரணத்திற்காவும் உடற்பயிற்சி கூடங்களில் பயன்படுத்த கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்..
கைது செய்யப்பட்ட இருவரும் இந்திய மருத்துவ கவுன்சில் சட்டப்படி தடை செய்யப்பட்ட மருந்து விற்பனை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்