“என் பொண்டாட்டி எனக்கு மட்டும் தான்” - புதிய வீடு கட்டும்போது ஏற்பட்ட பழக்கம்.. மது பாட்டிலால் குத்தி கொல்லப்பட்ட கள்ளக்காதலன்!

இருவரும் கிருஷ்ணகிரி அருகே உள்ள கூலங்கொட்டாய் பகுதியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்...
kirishnagiri murder judgement
kirishnagiri murder judgement
Published on
Updated on
2 min read

கிருஷ்ணகிரி மாவட்டம் கொண்டேப்பள்ளி ஊராட்சி மேலூர் பகுதியைச் சேர்ந்தவர் 49 வயதுடைய திருப்பதி. இவர் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்தார். ஆர்.பூசாரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த மற்றொரு 44 வயதுடைய திருப்பதி, கட்டிட மேஸ்திரியாக இருந்து வந்தார். இருவரும் புதிய வீடுகள் கட்டும் பணிகளில் ஒன்றாக சேர்ந்து பணியாற்றி வந்துள்ளனர். அப்போது எலக்ட்ரீசியன் திருப்பதிக்கும், கட்டிட மேஸ்திரி திருப்பதியின் மனைவிக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த மேஸ்திரி திருப்பதி, இருவரையும் கண்டித்துள்ளார். மேலும், எலக்ட்ரீசியன் திருப்பதியின் வீட்டிற்குச் சென்று அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரிடமும் இந்த விவகாரம் குறித்து தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இருவருக்கும் இடையேயான தொடர்பு தொடர்ந்து நீடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமும் மனவேதனையும் அடைந்த மேஸ்திரி திருப்பதி, கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதி எலக்ட்ரீசியன் திருப்பதியை மது அருந்துவதற்காக அழைத்துள்ளார். இதையடுத்து இருவரும் கிருஷ்ணகிரி அருகே உள்ள கூலங்கொட்டாய் பகுதியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது திருமணத்தை மீறிய உறவு தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த மேஸ்திரி திருப்பதி, “என் பொண்டாட்டி எனக்கு மட்டும் தான்” என கூறி எலக்ட்ரீசியன் திருப்பதியை தாக்கியதுடன், மதுபாட்டிலால் குத்தியதாகவும் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த எலக்ட்ரீசியன் திருப்பதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் மேஸ்திரி திருப்பதி அங்கிருந்து தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.

krishnagiri court
krishnagiri court

இதுகுறித்து உயிரிழந்த திருப்பதியின் மனைவி பாஞ்சாலி அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, மேஸ்திரி திருப்பதியை கைது செய்தனர். இந்த வழக்கு கடந்த 5 ஆண்டுகளாக கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி லதா தீர்ப்பு வழங்கினார். அதில், குற்றம்சாட்டப்பட்ட கட்டிட மேஸ்திரி திருப்பதிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார், தண்டனை விதிக்கப்பட்ட திருப்பதியை பாதுகாப்புடன் சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர். திருமணத்தை மீறிய உறவு தொடர்பான பிரச்சினையில் எலக்ட்ரீசியன் கொலை செய்யப்பட்ட வழக்கில், 5 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டிட மேஸ்திரிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com