“ஒரு வருட கள்ளக்காதல்.. ரூ.22 லட்சத்துடன் ஓட்டம்” - குழந்தைகளுக்காக கெஞ்சி கேட்ட கணவன்.. கல்லால் அடித்துக் கொலை!

சொத்தை குழந்தைகள் பெயரில் எழுதி வைக்குமாறும் கூறி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது...
krishnagiri husband killed wife
krishnagiri husband killed wife
Published on
Updated on
2 min read

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த கும்ளாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் 39 வயதுடைய நாராயணசாமி. கூலித்தொழிலாளியான இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய வித்யா என்பவருக்கும் திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், வித்யாவுக்கு வீட்டின் அருகே வசித்து வந்த புனித் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் நாளடைவில் இந்தப் பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறி, இருவரும் கடந்த ஓராண்டாக நெருக்கமாக பழகி வந்ததாக தெரிகிறது.

ஒரு கட்டத்தில் இதனை அறிந்த நாராயணசாமி, அவரது மனைவியை திருமணத்திற்கு மீறிய உறவை கைவிடுமாறு கண்டித்துள்ளார். ஆனால், வித்யா தொடர்ந்து புனித்துடன் பழகி வந்ததாகவும், இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வித்யா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

மேலும், தனது பெயரில் இருந்த 8 சென்ட் நிலத்தில் 1,500 சதுர அடி நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த அம்ரீஷ் என்பவருக்கு ரூ.22 லட்சத்திற்கு விற்றதாக கூறப்படுகிறது. நிலத்தை விற்ற பணத்தை பெற்றுக்கொண்ட வித்யா, தனது காதலன் புனித்துடன் கர்நாடக மாநிலம் ஆனேக்கல் பகுதிக்கு சென்றதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே, நேற்று (ஆக 24) கும்ளாபுரம் கிராமத்தில் உள்ள வங்கிக்கு தனது சேமிப்பு கணக்கில் இருந்த பணத்தை எடுப்பதற்காக வித்யா வந்துள்ளார்.

women body at murder spot
women body at murder spot

இதை நண்பர்கள் மூலம் அறிந்த நாராயணசாமி, வங்கிக்கு சென்று வித்யாவிடம் நிலத்தை விற்ற பணத்தை குழந்தைகளின் எதிர்காலத்திற்காக பயன்படுத்துமாறும், சொத்தை குழந்தைகள் பெயரில் எழுதி வைக்குமாறும் கூறி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் வித்யாவை வங்கிக்கு வெளியே அழைத்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த நாராயணசாமி, கீழே கிடந்த கல்லை எடுத்து வித்யாவை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த வித்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தளி போலீசார், வித்யாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மனைவியை கொலை செய்துவிட்டு தப்பியோடியதாக கூறப்படும் நாராயணசாமியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளகாதலனுக்காக நிலம் விற்ற பணம் தொடர்பான தகராறில் மனைவியை கணவன் கல்லால் அடித்துக் கொலை செய்த சம்பவம் கும்ளாபுரம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com