கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள தொரப்பள்ளி அக்ரஹாரத்தை சேர்ந்தவர் ராமிரெட்டி. இவரது மகன் 32 வயதான வெங்கட்ராஜ் இவர் பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அந்த நிறுவனத்தில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் வாங்கியவர்களிடம் மாத சந்தா தொகையை வசூலிப்பது மற்றும் கடன் தொகையை செலுத்தாத பட்சத்தில் வசூலிக்கும் வேலையை செய்து வந்தார்.
இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு தரப்பிற்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வந்தது. எருது விடும் விழா, பேனர்கள் வைத்தது பிறந்தநாள் விழா கொண்டாடியது போன்றவற்றில் அவர்களிடையே பிரச்சினை ஏற்பட்டது. மேலும் வெங்கட்ராஜ் மீது 2 அடிதடி வழக்குகளும் ஒசூர் நகர போலீசில் இருந்து வந்தது. இந்த நிலையில் திங்கட்கிழமை இரவு அதே பகுதியை சேர்ந்த சிக்கன் கடையில் வேலை செய்து வந்த 15 வயது சிறுவன் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது.
இதை பார்த்த வெங்கட்ராஜ் அவர்களை கண்டித்துள்ளார். மீண்டும் அந்த சிறுவர்கள் அதே போல வேகமாக செல்லவே ஆத்திரம் அடைந்த வெங்கட்ராஜ் அவர்களை பிடித்து அடித்தததாக சொல்லப்படுகிறது. எனவே சிறுவர்களுக்கும் வெங்கட்ராஜுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது 15 வயது சிறுவன் வெங்கட்ராஜை பார்த்து “உன்னால் முடிந்தால் தொரப்பள்ளி அக்ரஹாரம் பஸ் நிறுத்தத்திற்கு வா” என மிரட்டி சென்றார். இதனால் கோபத்தில் வெங்கட்ராஜூம் இரவு 11 மணி அளவில் அந்த சிறுவன் சொன்ன இடத்திற்கு சென்றுள்ளார்.
அவ்விடத்தில் காத்திருந்த 15 சிறுவன் உள்பட 9 பேர் வெங்கட்ராஜை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனிடையே வெங்கட்ராஜ் நடுரோட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இதுகுறித்து ஓசூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே இந்த கொலை தொடர்பாக தொரப்பள்ளி அக்ரஹாரத்தை சேர்ந்த விவசாயி நவீன்ரெட்டி (29). இருசக்கர வாகன மெக்கானிக் அஸ்லம் (19) மற்றும் சிக்கன் கடையில் வேலை செய்து வரும் 15 வயது சிறுவன், 18 வயது சிறுவன் என மொத்தம் 4 பேர் போலீசில் சரண் அடைந்தனர். மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த நிலையில் கொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றும், அதுவரை உடலை வாங்க மாட்டோம் என்றும் வெங்கட்ராஜின் உறவினர்கள் தெரிவித்தனர்.
அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் கொலையில் தொடர்புடைய 4 பேரை கைது செய்துள்ளதாகவும், மற்றவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு உடலை பெற்று சென்றனர். ஒசூரில் முன்விரோதத்தில் தனியார் நிதி நிறுவன ஊழியர், 9 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.