“கணவரைக் கொல்ல திட்டமிட்ட மனைவி” - ராகி களியில் விஷம் கலந்து கொடுத்ததாக வாக்குமூலம்.. உறவினர் மூலம் வெளிவந்த உண்மை!

வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் மகேஷின் வாய் மற்றும் மூக்கில் ரத்தம் வெளியேறி அவர்..
Krishnagiri Husband Poisoning Case
Krishnagiri Husband Poisoning Case
Published on: 
Updated on: 
2 min read

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்துள்ள பேலாளம் கிராமத்தைச் சேர்ந்தவர் 35 வயதுடைய மகேஷ். டெம்போ ஓட்டுநராகப் பணியாற்றி வந்த இவருக்கு, 32 வயதுடைய முனிரத்னா என்ற மனைவியும், 16 வயதில் மகன் மற்றும் 14 வயதில் மகளும் உள்ளனர். முனிரத்னா தளி பகுதியில் உள்ள தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில், கடந்த (நவ 14) ஆம் தேதி காலை மகேஷுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் மதியம் வீட்டில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் மகேஷின் மரணத்தில் அவர்களது உறவினர்கள் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து அவர்கள் தளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், போலீசார் மகேஷின் உடலை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். அதில், மகேஷ் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்திருப்பது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, சந்தேகத்தின் பேரில் அவரது மனைவி முனிரத்னாவிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

போலீசாரிடம் முனிரத்னா அளித்த வாக்குமூலத்தின்படி, மகேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டு செலவுகளுக்கு பணம் கொடுக்காமல், மனைவி சம்பாதிக்கும் பணத்தையும் வாங்கி குடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தட்டிக்கேட்ட முனிரத்னாவை மகேஷ் அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கணவரைக் கொலை செய்யத் திட்டமிட்ட முனிரத்னா, கடந்த (நவ 13) ஆம் தேதி இரவு வீட்டில் ராகி களி தயாரித்தபோது, தானியங்கள் கெடாமல் இருக்கப் பயன்படுத்தப்படும் மாத்திரைகளை கரைத்து அதில் கலந்து கணவருக்கு கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Krishnagiri Husband Poisoning Case
Krishnagiri Husband Poisoning Case

அந்த உணவைச் சாப்பிட்ட மகேஷுக்கு மறுநாள் காலை வயிற்றுவலி ஏற்பட்டது. இதையடுத்து, அவரது அண்ணன் மகேஷை தளியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். மகேஷ் வீட்டிலேயே உயிரிழந்துவிடுவார் என நினைத்து முனிரத்னா வேலைக்குச் சென்றதாகவும், பின்னர் கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அறிந்து அங்கு சென்றதாகவும் போலீசார் தெரிவித்தனர். கணவர் உயிர் பிழைத்தால் உணவில் விஷம் கலந்தது தெரியவந்துவிடும் என நினைத்த முனிரத்னா, சிகிச்சைக்குப் பணம் இல்லை என்று கூறி அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

மகேஷின் அண்ணன் சிகிச்சைக்குப் பணம் தருவதாகக் கூறியும், அதனை ஏற்காமல் முனிரத்னா கணவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர். வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் மகேஷின் வாய் மற்றும் மூக்கில் ரத்தம் வெளியேறி அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டன நிலையில் பிரேத பரிசோதனையில் விஷம் கலந்திருப்பது உறுதியானது. இதையடுத்து, முனிரத்னாவை கைது செய்த தளி போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்