ஓசி டீ-க்கே பரிதாப நிலை... அப்போ ரூ 12 லட்சம் லஞ்சம்-னா?

ஓசி டீ-க்கே பரிதாப நிலை... அப்போ ரூ 12 லட்சம் லஞ்சம்-னா?
Published on
Updated on
1 min read

செங்கல்பட்டு அருகே, கடந்த மாதம், கடை ஒன்றில் சாப்பிட்டுவிட்டு பணம் தர மறுத்த காவலர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், அதே காவல் நிலையத்தை சேர்ந்த காவல் ஆய்வாளர், மருத்துவர்கள் இரண்டு பேரை மிரட்டி 12 லட்சம் லஞ்சம் வாங்கியது அம்பலமாகியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மகளிர் காவல் நிலையத்தில், காட்டாங்கொளத்தூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை திரிசூலம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் (23) என்பவர் கடத்தி சென்று, பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி, கடந்த 10 தினங்களுக்கு முன், கூடுவாஞ்சேரி மகளிர் ஆய்வாளர் மகிதா தலைமையில் ரஞ்சித் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து ரஞ்சித்தை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் சிங்கபெருமாள் கோயில் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் பராசக்தி என்கிற பெண்மருத்துவரிடம், அச்சிறுமிக்கு இரண்டு முறை கருக்கலைப்பு செய்திருப்பதாகவும், அதேபோல் மறைமலைநகரில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனை மருத்துவர் உமா மஹேஸ்வரியிடம், இரண்டு முறை கருக்கலைப்பு செய்திருப்பதாகவும், கருக்கலைப்பு செய்யப்பட்ட சிறுமியின் தாய், ஆய்வாளர் மகிதாவிடம் கூறியிருக்கிறார்.

அதனடிப்படையில், ஆய்வாளர் மகிதா மருத்துவர் பராசக்தியிடம் நீங்கள் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்த குற்றத்தின்படி உங்கள் மீது நடவடிக்கை எடுத்து மெடிக்கல் கவுன்சில் வரை சென்றால், உங்களது மருத்துவமனைக்கு சீல்வைக்கும் நிலை உருவாகும் என மிரட்டியுள்ளார். இதனைப் பயன்படுத்தி, ரூபாய் 10 லட்சம் லஞ்சமாகவும், அதேபோல் மறைமலைநகர் மருத்துவர் உமாமஹேஸ்வரியை மிரட்டி 2 லட்சத்து 50 ஆயிரம் லஞ்சமாக பெற்றுள்ளதாகவும் நிரூபனமாகி உள்ளது. 

இந்நிலையில், மருத்துவர்களை மிரட்டி 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக, தாம்பரம் காவல் ஆணையாளர் அமல்ராஜ், கூடுவாஞ்சேரி காவல் ஆய்வாளர் மகிதாவை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்துள்ளார். ஏற்கனவே கடந்த இரண்டு மாதம் முன்பு இதே காவல்நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி மற்றும் இரண்டு பெண் காவலர்கள் உள்பட மூன்று பேர் டீக்கடையில் டீ, ஸ்நாக்ஸ் சாப்பிட்டு பைசா கொடுக்க மறுத்து மிரட்டிய வீடியோ வைரலாகி அதனடிப்படையில்  பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com