

மகாராஷ்டிரா மாநிலம் அம்பர்நாத் பகுதியில், தனது தாயுடன் வசித்து வந்த 7 வயது சிறுவன், தாயின் லிவ்-இன் பார்ட்னரால் கொடூரமாக தாக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் தனது தாயுடன் உறங்கியதால், அவர்களது உறவுக்கு தடையாக இருப்பதாக கருதியே குற்றம் சாட்டப்பட்டவர் இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டதாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
காவல்துறையினர் தெரிவித்ததாவது, 25 வயதுடைய அந்த நபர், தனது கணவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்த பெண்ணுடன் லிவ்-இன் உறவில் இருந்து வந்துள்ளார். அப்பெண் தனது இளைய மகனான 7 வயது சிறுவனுடன் அம்பர்நாத்தில் உள்ள அவரது வீட்டில் வசித்து வந்தார். பெண்ணின் மற்ற இரு குழந்தைகள் அவர்களது தந்தையுடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. சிறுவன் தினமும் தனது தாயுடன் உறங்கியதால், அந்த நபர் அவனை தங்களது உறவுக்கு இடையூறாகக் கருதியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. தாய் வேலைக்குச் சென்றிருந்த நேரங்களில், சிறுவனை அவர் அடிக்கடி அடித்து துன்புறுத்தியதாகவும், இதுகுறித்து சிறுவன் பலமுறை தனது தாயிடம் புகார் கூறியதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையடுத்து, அப்பெண் தனது லிவிங் - இன் பார்ட்னரை எச்சரித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், சிறுவன் மீதான தாக்குதல் தொடர்ந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த ஜூலை 17-ஆம் தேதி, குற்றம் சாட்டப்பட்டவர் சிறுவனை மரத்தால் செய்யப்பட்ட சமையல் கட்டையால் சரமாரியாக தாக்கியதுடன், பலமுறை உதைத்ததாக கூறப்படுகிறது. இதில் சிறுவனுக்கு கடுமையான உள் காயங்கள் ஏற்பட்டன.
முதலில் சிறுவன் உல்லாஸ் நகரில் உள்ள சென்ட்ரல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உடல்நிலை மோசமடைந்ததால் சியோன் மருத்துவமனைக்கும், அங்கிருந்து மும்பையில் உள்ள மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவத்திற்குப் பிறகு, அடையாளம் தெரியாத சிலர் சிறுவனை தாக்கியதாகக் கூறி காவல்துறையினரைத் தவறாக வழிநடத்த குற்றம் சாட்டப்பட்டவர் முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால், அவரது வாக்குமூலத்தில் இருந்த முரண்பாடுகளைத் தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், சிறுவன் மீது தொடர்ந்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் சம்பவத்தின் முழு விவரங்களும் வெளிச்சத்துக்கு வந்தன.
காவல் உதவி ஆணையர் சைலேஷ் காலே மற்றும் மூத்த காவல் ஆய்வாளர் ஷபீர் சையத் ஆகியோர், குற்றம் சாட்டப்பட்ட நபர் தற்போது காவலில் இருப்பதாக தெரிவித்தனர். சிறுவனின் உயிரிழப்பைத் தொடர்ந்து, அவர் மீது கொலை உள்ளிட்ட கடுமையான குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படவுள்ளதாகவும், சம்பவத்தின் அனைத்து கோணங்களிலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.