“உயிரை பறித்த ‘LOAN APP’.. ஆபாச புகைப்படங்களுடன் வந்த மிரட்டல்” - கடிதத்தில் வெளியான உண்மை?

"அவன் தூக்கில் தொங்கிய அறையில் இரண்டு பீடி துண்டுகள் கிடந்துள்ளது..."
Loan APP scam
Published on
Updated on
2 min read

தொழில்நுட்ப வளர்ச்சியின் நிழலாக உருவெடுத்துள்ள சட்டவிரோத ஆன்லைன் லோன் ஆப் கும்பல்களின் அச்சுறுத்தல், நாளுக்கு நாள் அப்பாவி இளைஞர்களின் உயிரைப் பறிக்கும் பேராபத்தாக மாறியுள்ளது. தொடக்கத்தில் மிக எளிதாகக் கடன் தருவதாக கூறி வலைவிரித்து, பின்னர் வட்டிக்கு மேல் வட்டி கேட்டு மிரட்டுவதும் பாலியல் ரீதியாகவும் தனிநபர் கண்ணியத்தை சீர்குலைக்கும் வகையில் புகைப்படங்களைச் சித்தரித்து  மிரட்டுவதும் தொடர்ந்து வெளிச்சத்திற்கு வந்த வண்ணம் உள்ளது. 

செங்கல்பட்டு அடுத்த மகேந்திரா சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் இவரது 24 வயது மகன் மணிகண்டன். இவர் தனது அன்றாட தேவைகளுக்காகவும் செலவுகளுக்காகவும் ஆன்லைன் லோன் செயலிகளை நாடியதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் வெவ்வேறு ஆன்லைன் லோன் செயலிகள் மூலம் முறையே 6,000, 9,000 மற்றும் 33,000 எனப் பல கட்டங்களாக சிறு சிறு தொகைகளை கடனாக பெற்றுள்ளார். ஆனால் கடன் கொடுத்த சில நாட்களிலேயே அந்த ஆன்லைன் செயலிகளின் பிரதிநிதிகள் அசல் தொகையை விட பல மடங்கு கூடுதல் பணம் செலுத்துமாறு மணிகண்டனைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளனர்.

ஒரு கட்டத்திற்கு மேல் கேட்ட தொகையை கொடுக்க தாமதமானதால் கடன் செயலி கும்பல் மணிகண்டனின் செல்போன் தொடர்புகளை  சட்டவிரோதமாக பயன்படுத்தி, அவருடைய புகைப்படங்களை மிக ஆபாசமாக எடிட் செய்து  அச்சுறுத்தத் தொடங்கியுள்ளனர். “உடனடியாகக் கேட்கும் தொகையை கட்டாவிட்டால் உனது ஆபாச புகைப்படங்களை உனது தாய், தந்தை, அக்கா, உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பி விடுவோம்” எனக் கூறி தொடர் மிரட்டல் விடுத்துள்ளனர். இந்தத் மிரட்டல் மெசேஜ்கள் சமூகத்தில் தனக்கு அவமானத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற பயத்தாலும் கடந்த சில நாட்களாக மணிகண்டன் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று மணிகண்டனின் பெற்றோருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர்களைச் சிகிச்சைக்காகச் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு  செய்துள்ளனர். மணிகண்டன் தனது தாய் மற்றும் தந்தையை பேருந்து நிறுத்தம் வரை சென்று பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்துவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். பெற்றோர் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து மாலையில் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது நீண்ட நேரம் கதவைத் தட்டியும் திறக்கவில்லை. அதையடுத்து மணிகண்டனை போனில் அழைத்தும் எந்தப் பதிலும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது அறையில் மணிகண்டன் தூக்கில் தொங்குவதை கண்டு பெற்றோர்கள் கதறி துடித்துள்ளனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிங்கப்பெருமாள் கோவில் காவல் துறையினர் மணிகண்டனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்த அவரது அறையைச் சோதனையிட்டபோது கடிதம் ஒன்று கிடைத்துள்ளது, அதில் “அம்மா, அப்பா, அக்கா, மாமா, அண்ணா, அண்ணி எல்லோருக்கும் Sorry” எனத் தன் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்டு மணிகண்டன் எழுதி வைத்திருந்த  தற்கொலை கடிதத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்

இச்சம்பவம் குறித்து மணிகண்டனின் தந்தை வெங்கடேசன் கூறுகையில், “என் மகனுக்கு வெளியில் எந்த நபரிடமும் கடன் வாங்கும் பழக்கம் கிடையாது அவன் ஆன்லைன் லோன் ஆப்பில் கடன் வாங்கிய விஷயமே அவன் இறந்த பிறகுதான் எங்களுக்குத் தெரிய வருகிறது. என் மகனின் மரணத்தில் எனக்குப் பலத்த சந்தேகம் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். மேலும் “என் மகனுக்கு சிகரெட் அல்லது பீடி பிடிக்கும் எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது.. ஆனால் அவன் தூக்கில் தொங்கிய அறையில் இரண்டு பீடி துண்டுகள் கிடந்துள்ளது.. யாராவது உள்ளே வந்து அவனை மிரட்டினார்களா? அல்லது வேறு எதுவும் நடந்ததா? என்று காவல்துறை முழுமையாக விசாரிக்க வேண்டும். என் பிள்ளையைப் போல இனி எந்தவொரு இளைஞனும் இந்த ஆன்லைன் லோன் ஆப் கொடூர வலையில் சிக்கி உயிரை விடக்கூடாது” என்று பேசியுள்ளார். மேலும் “இதற்குக் காரணமான ஆப் நிறுவனங்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அழுதபடியே தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து சிங்கப்பெருமாள் கோவில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மணிகண்டனின் கைபேசியைக் கைப்பற்றிய போலீசார் அவருக்கு மெசேஜ் மற்றும் அழைப்புகள் மூலம் மிரட்டல் விடுத்த ஆன்லைன் லோன் செயலி எண்கள் அவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் குறித்து சைபர் கிரைம்  வல்லுநர்களின் உதவியுடன் ஆய்வு செய்து வருகின்றனர். இளைஞரின் அறையில் கண்டெடுக்கப்பட்ட பீடி துண்டுகள் குறித்தும் தடய அறிவியல் துறை மூலம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

எவ்வளவு பெரிய நிதி நெருக்கடி அல்லது மிரட்டல்கள் வந்தாலும் உயிரை மாய்த்துக் கொள்வது எதற்கும் தீர்வாகாது. இது போன்ற சட்டவிரோத கடன் செயலிகளிடம் சிக்கி மிரட்டலுக்கு ஆளாகும் நபர்கள் பயப்படாமல் உடனடியாக காவல்துறை மற்றும் சைபர் கிரைம் 1930 பிரிவை அணுகிப் புகார் அளிக்க முன்வர வேண்டும். விழிப்புணர்வும் தைரியமான சட்டப் போராட்டமுமே இதுபோன்ற கொடூர செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என காவல்துறை அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தி உள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com