"விடுதி அறைக்குள் சடலமாக கிடந்த மனைவி" - அவசர அவசரமாக ஹோட்டலை விட்டு சென்ற கணவன்! வலைவீசி தேடும் போலீசார்

மாற்றுச் சாவியைப் பயன்படுத்தி கதவைத் திறந்து அறைக்குள் சென்றுள்ளனர். அப்போது படுக்கையை ஒரு பெண் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Bengaluru lodge murder
Bengaluru lodge murder
Published on
Updated on
1 min read

பெங்களூருவின் புறநகர்ப் பகுதியான தொட்டபள்ளாப்பூரில் உள்ள ஒரு தங்கும் விடுதியில், 21 வயதுப் பெண் ஒருவர் கடந்த புதன்கிழமை அன்று சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணை அவரது கணவரே அவரைக் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தொட்டபள்ளாப்பூர் நகர போலீசார், குற்றம் சாட்டப்பட்டவரை வலைவீசி தேடிவருகின்றனர்.

இறந்த பெண், ஒரு தனியார் நிறுவனத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து வந்த 21 வயதான வித்யா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரும் அவரது கணவரான ஆனந்தும் (29) கௌரிபிடானூரைச் சேர்ந்தவர்கள் என்றும் இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தையும் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

காவல்துறையின் தகவல்படி, ஆனந்த் என்பவர் புதன்கிழமை மதியம் தொட்டபள்ளாப்பூரில் உள்ள 'பசவ பவன்' அருகே இருக்கும் விடுதிக்குச் சென்றுள்ளார். அதன் பின்னர், மாலையில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அன்று இரவு விடுதி ஊழியர்கள் அறைக்கதவைத் தட்டியபோது, ​​அறையில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. "பதில் ஏதும் வரவில்லை, அறையும் பூட்டப்பட்டுள்ளது இதில் ஏதோ சரியில்லை" எனச் சந்தேகித்த ஊழியர்கள், மாற்றுச் சாவியைப் பயன்படுத்தி கதவைத் திறந்து அறைக்குள் சென்றுள்ளனர். அப்போது படுக்கையில் ஒரு பெண் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இறந்து போன வித்யாவின் அடையாள அட்டையில் இணைக்கப்பட்டிருந்த நாடாவைக் கொண்டு ஆனந்த் அவரைக் கழுத்தை நெரித்துக் கொன்றிருக்கலாம் என காவல்துறை தரப்பில் இருந்து சந்தேகிப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, கைப்பற்றப்பட்ட சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக காவலர்கள் அனுப்பியுள்ளனர். பின்னர், இந்த வழக்கில் தொடர்புடையவராக கருதப்படும் பெண்ணின் கணவரான ஆனந்த் மீது கொலை வழக்கும் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் காவல்துறையின் கூற்றுப்படி, அந்தத் தம்பதியினர் சிறுசிறு விஷயங்களுக்காக தங்களுக்குள் அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஜூன் மாதம், வித்யாவைக் காணவில்லை என்று ஆனந்த் உள்ளூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சில நாட்களுக்குப் பிறகு காவல்துறையினர் வித்யாவை கண்டுபிடித்து, தம்பதியினருக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்துள்ளனர். இருந்தாலும், அந்தத் தம்பதியினர் பிரிந்தே வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், காவல்துறையினரின் விசாரணையில் வித்யா சிறுமியாக இருந்தபோது ஆனந்த் அவரைத் திருமணம் செய்துகொண்டது தெரியவந்ததை அடுத்து, அவர் மீது போக்சோ வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com