அமெரிக்காவின், லூசியானாவைச் சேர்ந்த ஒரு கொடூர குற்றவாளியான ஒருவருக்கு கடந்த வியாழக்கிழமை (நவ 12) அன்று ஆண்மை நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டது பேசுபொருளாகியுள்ளது. மேலும், அமெரிக்காவில் இத்தகைய கடுமையான தண்டனையை எதிர்கொள்ளும் இரண்டாவது நபர் இவர்தான் என்றும் கூறப்படுகிறது.
முன்னாள் காவலரும் தன்னார்வ தீயணைப்பு வீரருமான கெட்ரேயன் கே. வில்லியம்ஸ் மீது, ஒரு சிறுவனை பாலியல் வன்புணர்வு செய்தது, ஒரு சிறுவனுடன் தகாத முறையில் நடந்துகொண்டது மற்றும் குழந்தைகளின் ஆபாசப் படங்களை வைத்திருந்தது ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ், வெறும் 39 நிமிடங்கள் மட்டுமே விவாதித்து அக்டோபர் 1 அன்று கெட்ரேயன் கே. வில்லியம்ஸ் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், "ஒருவர் ஒரு குழந்தையைப் பாலியல் ரீதியாகத் தவறாகப் பயன்படுத்தினால், நாங்கள் அவரது ஆண்மையைப் பறிப்போம்!" என்று 18வது நீதித்துறை மாவட்ட வழக்கறிஞர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை (நவ 13) அன்று ஒரு அறிக்கையில் அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், தகுந்த நீதியானது அந்த குற்றவாளிக்கு வழங்கப்பட்டுள்ளதால் இனி ஒருபோதும் அந்த நபரால் எந்தக் குழந்தையையும் துன்புறுத்த முடியாது என்பதை அறிந்து பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஆறுதல் அடைவார்கள் என நாங்கள் நம்புகிறோம் என்றும் அந்த வழக்கறிஞர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 31 வயதான கெட்ரேயன் கே. வில்லியம்ஸ், தான் தன்னார்வலராகப் பணியாற்றிய 'நியூ ரோட்ஸ்' தீயணைப்பு நிலையங்களில், 8 முதல் 11 வயதுக்குட்பட்ட பல சிறுவர்களை துன்புறுத்தியுள்ளார்.
மேலும் அவர், தனது பணியிடத்திலும் வீட்டிலும் பாதிக்கப்பட்டவர்களை பாலியல் ரீதியாக தாக்கியதுடன், அந்தப் பாலியல் வன்புணர்வு சம்பவங்களை வீடியோவாகப் பதிவும் செய்துள்ளார். லூசியானாவில் பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்குக் 'கட்டாய ஆயுள் தண்டனை' விதிக்கப்பட்டாலும், அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் சார்பில், கெட்ரேயன் கே. வில்லியம்ஸுக்கு ஒருபோதும் மறக்க முடியாத தண்டனையை வழங்க முயன்று, இறுதியில் வில்லியம்ஸை இரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அவர் ஒரு குழந்தைகளை வேட்டையாடுபவர், அவருக்குக் கிடைப்பதற்கும் மேலான தண்டனைக்கு தகுதியானவர். இந்தக் கொடூரமான குற்றங்களுக்கான தண்டனையின் மற்றுமொரு நிலைதான் இந்த 'ஆண்மை நீக்கம்' என்றும் வழக்கறிஞர்கள் சார்பில் கூறப்பட்டுள்ளது.
2008-ல் நிறுவப்பட்டு, 2024-ல் திருத்தப்பட்ட லூசியானாவின் ஆண்மை நீக்கச் சட்டத்தின்படி , ஒருவர் முதல் முறையாகக் கடுமையான பாலியல் குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டால், அவருக்கு இரசாயன ஆண்மை நீக்கம் அல்லது அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கம் செய்தல் ஆகிய இரண்டில் ஒன்றைச் செய்யுமாறு உத்தரவிட நீதிபதிக்கு அதிகாரம் உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது குற்றவாளியான கெட்ரேயன் கே. வில்லியம்ஸுக்கு மூன்று ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டதோடு, அவருக்கு ஆண்மை நீக்கமும் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, தண்டனை வழங்கும் போது, மாவட்ட நீதிபதி, இது தான் பார்த்ததிலேயே மிகவும் "மோசமான" குழந்தை பாலியல் வன்கொடுமை வழக்கு என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்