யூடுப்பர் மதனின் மனைவி கிருத்திகா கைது... சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி!!

மதன் ஆபாசமாக பேசி தயார் செய்த வீடியோக்களை யூ-டியூபில் பதிவேற்றம் செய்ததாக மதனின் மனைவி கிருத்திகா-வை கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யூடுப்பர் மதனின் மனைவி கிருத்திகா கைது... சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி!!
Published on
Updated on
2 min read
யூடியூப் மதன் நடத்தும் யூட்யூப் சேனல் இன் நிர்வாகி கிருத்திகா என்பதால் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். 
பப்ஜி விளையாட்டில் ஆபாசமாக பேசி யூட்யூபில் நேரலை ஒளிபரப்பு செய்து வந்தவர் மதன். தொடர்ந்து  பெண்கள் மற்றும் குழந்தைகள் குறித்து தகாத வார்த்தையால் பேசி பதிவிட்டு வந்த மதன் மீது சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் கிளம்பியது. குறிப்பாக மதன் மீது  நடவடிக்கை எடுக்கக்கோரி  புளியந்தோப்பு சைபர் கிரைம் பிரிவு போலீஸாரிடம் இரண்டு புகார்கள்  வந்தது. 
இதனையடுத்து புகாரின் அடிப்படையில் போலீசார் மதனை நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். ஆனால் மதன் நேரில் ஆஜர் ஆகாததால் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். குறிப்பாக மதன் வி.பி.என் சர்வரை பயன்படுத்தி செல்போன் உபயோகிப்பது, நேரலை செய்வது என்றிருப்பதால் போலீசார் யூ-டியூபர் மதனை நெருங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பப்ஜி மதன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைமிலும் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து புளியந்தோப்பு சைபர் கிரைம் பிரிவு மற்றும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இணைந்து மதனை தீவிரமாக தேடி வருகின்றனர். மதன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைமில் கொடுக்கப்பட்டிருந்த ஒரு புகாரில் 4 பிரிவுகளில் மதன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புளியந்தோப்பு சைபர் பிரிவில் இருந்த 2 புகார்களும் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம்மிற்கு மாற்றப்பட்டுள்ளது. 
இந்த நிலையில் பப்ஜி மதன் மீது தமிழகம் முழுவதும் ஏராளமான ஆன்லைன் மூலம் காவல்துறைக்கு புகார்கள் வர தொடங்கியுள்ளது. குறிப்பாக தமிழக காவல்துறைக்கு இதுவரை 159 ஆன்லைன் புகார்கள் பப்ஜி மதன் மீது வந்துள்ளதாக தமிழக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. அந்த புகார்களை அந்தந்த மாவட்டத்தில் இருக்கும் சைபர் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பப்ஜி மதன் மீது தொடர்ந்து ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் உள்ளதால் வழக்கு சிபிசிஐடி சைபர் கிரைம்மிற்கு மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் யூ-டியூபர் மதனை நெருங்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பெருங்களத்தூரில் உள்ள மதன் வீட்டில் இருந்து அவரின் தந்தை, அவரின் அண்ணன், அவரின் மனைவி கிருத்திகா மற்றும் 8 மாத கைக்குழந்தையை அழைத்து வந்து சென்னை சைபர் கிரைம் போலீசார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மதன் இருக்கும் இடம் தற்போது வரை தெரியாமல் இருப்பதால் அடுத்தகட்டமாக மதனை பிடிக்க பல்வேறு திட்டங்களை காவல் துறையினர் தீட்டி வருவதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் தந்தையிடமும், மதனின் மனைவியிடமும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில் மதனின் மனைவி கிருத்திகா-வை கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதன் நடத்தும் யூட்யூப் சேனல் இன் நிர்வாகி கிருத்திகா என்பதாலும், மதன் ஆபாசமாக பேசி தயார் செய்த வீடியோக்களை யூ-டியூபில் பதிவேற்றம் செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com