காணாமல் போன காதல் கணவன்.. கழிவுநீர் தொட்டியில் கிடைத்த மண்டை ஓடு - அம்பலமான அதிர்ச்சி பின்னணி!

சோயிப் என்பவரைத் தொழில்நுட்பக் கண்காணிப்பு மூலம் நர்சிங்பூர் பகுதியில் வைத்துக் கைது செய்தனர்...
காணாமல் போன காதல் கணவன்.. கழிவுநீர் தொட்டியில் கிடைத்த மண்டை ஓடு - அம்பலமான அதிர்ச்சி பின்னணி!
Published on
Updated on
2 min read

மத்திய பிரதேச மாநிலம் தேவ்ரி நகரில் கடந்த ஆறு மாதங்களாக மர்மமாக நீடித்த ஒரு இளைஞனின் காணாமல் போன வழக்கு, தற்போது ஒரு கழிவுநீர் தொட்டிக்குள் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடு மற்றும் எலும்புத் துண்டுகளால் திடுக்கிடும் திருப்பத்தை எட்டியுள்ளது. சமூக வலைதளத்தில் தொடங்கிய காதல், இறுதியில் போதைப்பொருள் பழக்கம், துரோகம் மற்றும் கொடூரமான திட்டமிட்ட படுகொலையில் முடிந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் காணாமல் போனதாகக் கருதப்பட்ட பிரின்ஸ் பால்மிகி என்ற 22 வயது இளைஞர், தனது மனைவியின் கள்ளக்காதலால் மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்டது தற்போது அம்பலமாகியுள்ளது.

சாகர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரின்ஸ் பால்மிகி, கடந்த 2023 ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல் காணாமல் போனதாக அவரது மனைவி துளசி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். ஆரம்பத்தில் இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் காவல் துறை இதனைச் சாதாரண காணாமல் போன வழக்காகக் கருதி கிடப்பில் போட்டது. ஆனால், பிரின்ஸின் மரணத்தில் ஏதோ மர்மம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தொடர்ந்து சந்தேகம் எழுப்பி வந்தனர். இந்த அழுத்தத்தின் காரணமாகத் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்திய காவல் துறையினர், சந்தேகத்தின் அடிப்படையில் சோயிப் என்பவரைத் தொழில்நுட்பக் கண்காணிப்பு மூலம் நர்சிங்பூர் பகுதியில் வைத்துக் கைது செய்தனர்.

காவல் துறையினரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், சோயிப் தான் செய்த கொடூரக் குற்றத்தை ஒப்புக்கொண்டார். விசாரணையில் வெளியான தகவல்கள் அதிர்ச்சியூட்டுவதாக அமைந்தன. துளசிக்கும் சோயிப்புக்கும் இடையே பிரின்ஸுடனான திருமணத்திற்கு முன்பே காதல் தொடர்பு இருந்துள்ளது. சமூக வலைதளம் மூலம் பழகி பிரின்ஸைத் திருமணம் செய்துகொண்ட பிறகும், துளசி தனது பழைய காதலன் சோயிப்புடன் ரகசியத் தொடர்பைத் தொடர்ந்து வந்துள்ளார். திருமணமான ஒரே மாதத்தில் துளசியின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டைகள் வெடித்துள்ளன. இதன் காரணமாக அவர்கள் தேவ்ரி நகரில் உள்ள துளசியின் பெற்றோர் வீட்டிற்குச் குடிபெயர்ந்தனர்.

தேவ்ரிக்கு வந்த பிறகு, ஒரு திட்டமிட்ட சதிவலை பின்னப்பட்டது. சோயிப் வேண்டுமென்றே பிரின்ஸுடன் நண்பராகப் பழகி, அவருக்கு 'ஸ்மாக்' எனும் போதைப்பொருளைப் பழக்கப்படுத்தியுள்ளார். பிரின்ஸ் போதையில் இருக்கும் நேரங்களில், சோயிப் துளசியைச் சந்தித்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் பிரின்ஸுக்குத் தெரியவர, அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சோயிப், பிரின்ஸைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி, பிரின்ஸுக்கு அதிக அளவு போதை மருந்து கொடுத்து மயக்கமடையச் செய்த சோயிப், அவரைப் படுகொலை செய்து தனது வீட்டின் பின்புறம் உள்ள கழிவுநீர் தொட்டிக்குள் உடலை வீசியுள்ளார்.

கொலை செய்ததோடு நில்லாமல், பிணம் அழுகும் நாற்றம் வெளியே தெரியாமல் இருக்க அதன் மேல் குப்பைகளை அள்ளிக் கொட்டியுள்ளார். மேலும், உடல் விரைவில் சிதைந்து தடையமே இல்லாமல் போவதற்காகத் தொடர்ந்து ஒரு மாத காலம் அந்த இடத்தைக் கண்காணித்து, பிணத்தின் மீது அதிக அளவு உப்பைக் கொட்டி வந்துள்ளார். கொலைக்குப் பிறகு, சோயிப் மற்றும் துளசி ஆகிய இருவரும் குஜராத் மாநிலத்திற்குத் தப்பிச் சென்று அங்கு ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். அவர்கள் ஒன்றாக இருக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பிரின்ஸின் குடும்பத்தினருக்குக் கிடைக்கவே, அவர்களின் சந்தேகம் உறுதிப்பட்டு காவல் துறையிடம் ஆதாரங்களை ஒப்படைத்தனர்.

காவல் துறையினர் சோயிப்பைச் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று கழிவுநீர் தொட்டியைத் தோண்டியபோது, அங்கிருந்து பிரின்ஸின் மண்டை ஓடு மற்றும் எலும்புகள் மீட்கப்பட்டன. இவை தற்போது டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த வழக்கில் துளசிக்கு எந்த அளவிற்குப் பங்கு உள்ளது மற்றும் வேறு யாருக்காவது இதில் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்துக் கூடுதல் விசாரணை நடைபெற்று வருகிறது. தன் மகனின் மறைவு விபத்தோ அல்லது தற்கொலையோ அல்ல, அது திட்டமிட்ட கொலை என்று உறுதியாக நம்பிப் போராடிய பிரின்ஸின் குடும்பத்தினருக்கு ஆறு மாத காலத்திற்குப் பிறகு நீதி கிடைத்துள்ளது. இந்தச் சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com