“7 பேரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற பெண்” - கணவன் குடும்பம் நடத்த மறுத்ததால் ஆத்திரம்.. 11 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த நீதி!

கண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் தீயில் சிக்கி உயிரைக் காப்பாற்ற முடியாமல் பரிதாபமாக உயிரிழந்தனர்..
“7 பேரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற பெண்” - கணவன் குடும்பம் நடத்த மறுத்ததால் ஆத்திரம்.. 11 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த நீதி!
Published on
Updated on
2 min read

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள குமாரபுரத்தைச் சேர்ந்த வேலுவின் மகன் 25 வயதுடைய கண்ணன். அதே பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய பரமேஸ்வரி என்பவரை காதலித்து வந்த நிலையில், கடந்த 2013ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு, கண்ணன் சென்னைகு சென்ற நிலையில் தனது மனைவி பரமேஸ்வரியுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என கூறியுள்ளார். இதனால் கணவன் - மனைவிக்கு இடையே தொடர்ந்து குடும்பப் பிரச்சினை இருந்து வந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கணவர் மீது ஏற்பட்ட ஆத்திரத்தில் பரமேஸ்வரி தனது தாய் முருகேஸ்வரி (40), மற்றும் சகோதரர் ராஜபாண்டி (19) ஆகியோருடன் இணைந்து கண்ணனை கொலை செய்ய திட்டமிட்டதாக வழக்கில் குற்றம்சாட்டப்பட்டது.

வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த குடும்பம்.. அதிகாலையில் அரங்கேறிய கொடூரம்!

கடந்த 2015ஆம் ஆண்டு (மே 20) ஆம் தேதி அதிகாலை, கண்ணன் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டிய பரமேஸ்வரி, ஜன்னல் வழியாக வீட்டிற்குள் பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக விசாரணையில் தெரியவந்தது. இதனால் கண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் தீயில் சிக்கி உயிரைக் காப்பாற்ற முடியாமல் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவத்தில் கண்ணன் (25), அவரது தந்தை வேலு (60), தாய் பேச்சியம்மாள் (55), சகோதரி சுகன்யா (35), மற்றும் சகோதரியின் குழந்தைகள் சங்கீதா (17), சஞ்சித் (12), வினித் (10) என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இதுகுறித்து சேடபட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அப்போதைய டி.எஸ்.பி. கோமதி தலைமையில் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் அடிப்படையில் கண்ணனின் மனைவி பரமேஸ்வரி, அவரது தாய் முருகேஸ்வரி மற்றும் ராஜபாண்டி ஆகியோர் வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

11 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு!

இந்த வழக்கு மதுரை 6-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில், பொறுப்பு நீதிபதி உதயவேலவன் இன்று தீர்ப்பளித்தார். வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பரமேஸ்வரி, முருகேஸ்வரி, ராஜபாண்டி ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார். மூவருக்கும் தலா 8 ஆயுள் தண்டனைகள், 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.45,000 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், விதிக்கப்பட்ட அனைத்து தண்டனைகளையும் ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கணவர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில், 11 ஆண்டுகளுக்குப் பிறகு மனைவி உள்ளிட்ட 3 பேருக்கு தலா 8 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com