

மதுரை மாவட்டம், மதுரை சுப்பிரமணியபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பிரபலமான அரசு உதவிபெறும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு பயிலும் மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியர் ஒருவர் தொடர்ந்து பாலியல் ரீதியான தொந்தரவு அளித்து வருவதாகவும் பள்ளி வகுப்புகளின் போது மாணவிகளிடம் ஆபாசமாக பேசுவதாகவும் மேலும் மாணவிகளிடம் தவறான வீடியோக்களை காண்பித்து தொந்தரவு அளிப்பதாகவும் கூறி மாணவிகள் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர்.
மாணவிகள் அளித்த புகாரின் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் மற்றும் ஆசிரியரிடம் இது குறித்து விசாரிக்காமல் அப்பள்ளியின் தலைமை ஆசிரியரும் ஆசிரியருக்கு சாதகமாக நடந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அந்த ஆசிரியரின் நடவடிக்கைகள் மேலும் மோசமாகி தொடர்ந்து மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இதனால் பள்ளிக்கு செல்ல அவதிப்பட்டு வந்த மாணவிகள் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று மாணவிகள் தரப்பில் புகார் மனு அளித்திருக்கின்றனர்.
அந்த புகார் மனுவில் பள்ளியில் உள்ள ஆண் ஆசிரியர் ஒருவர் தொடர்ந்து மாணவிகளை தவறான இடங்களில் தொட்டு பாலியல் ரீதியான தொந்தரவு அளித்து வருவதாகவும், ஆண் ஆசிரியருக்கு ஆதரவாக தலைமை ஆசிரியரும் துணை தலைமை ஆசிரியரும் செயல்படுவதாகவும். உதவி தலைமை ஆசிரியர் மாணவர்களுக்கு இடையே பிரச்சனையை உருவாக்கி இரு தரப்பாக மாற்றி விடுகிறார் எனவும் பள்ளியில் மாணவர்கள் மது அருந்திவிட்டு வருகை தருகிறார்கள் அதனை ஆசிரியர்கள் கண்டு கொள்வதில்லை எனவும் தெரிவித்திருக்கின்றனர்.
மேலும் சில மாணவர்களுடைய பெற்றோர்களும் மாணவிகளை ஆபாசமாக தவறாக பேசுகிறார்கள் எனவும் ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளியை சில நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடுவதாகவும் அதனால் பள்ளி வகுப்பறைகளில் பீடி சிகரெட் துண்டுகள் கிடப்பதாகவும் தங்களது புகாரில் குறிப்பிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகாரை ஏற்று வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் பள்ளியில் மாணவர்களுக்கு பாலியல் சீண்டல் அளித்த ஆசிரியர், தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.