“ஓட ஓட விரட்டி வெட்டப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி” - காவல் நிலையம் அருகிலேயே நடந்த கொலை.. அதிகாலையில் பரபரப்பு!

துணை ஆணையர் இனிகோ திவ்யன் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்...
Madurai Sappani Saravanan Murder
Madurai Sappani Saravanan Murder
Published on
Updated on
1 min read

மதுரை மாநகர் சோலை அழகுபுரம் பகுதியில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 50 வயது நபரை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சோலை அழகுபுரம் சப்பாணி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் 50 வயதுடைய சப்பாணி சரவணன். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், சில வழக்குகளில் சிறை தண்டனை அனுபவித்துவிட்டு தற்போது விடுதலையாகி வீட்டில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சோலை அழகுபுரம் பிரதான சாலையில் உள்ள டீக்கடைக்கு சப்பாணி சரவணன் தினமும் சென்று டீ அருந்திவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். இதனை மர்ம கும்பல் ஒன்று தொடர்ந்து கண்காணித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று(செப் 19) அதிகாலை சப்பாணி சரவணன் டீக்கடைக்கு சென்றிருந்தபோது, வாள், கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க சப்பாணி சரவணன் ஓடிய நிலையில், அவரை விடாமல் விரட்டிச் சென்ற மர்ம நபர்கள், சாலையில் ஓட ஓட விரட்டி வெட்டியும் கத்தியால் குத்தியும் கொலை செய்தனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில், அதுவும் ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையம் அருகே சப்பாணி சரவணன் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் காலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் அந்தப் பகுதியை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஜெய்ஹிந்த்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஆயுதங்களையும் கைப்பற்றிய போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மேலும், கொலை நடைபெற்ற இடத்திற்கு துணை ஆணையர் இனிகோ திவ்யன் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். சப்பாணி சரவணன் மீது ஏற்கெனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இந்த கொலை சம்பவத்திற்கும் முன்விரோதம் காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதே நேரத்தில், வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. மதுரையில் அதிகாலை நேரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில், காவல் நிலையம் அருகிலேயே ஒருவர் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com