தற்கொலையா… கொலையா? மனைவியின் உடலைத் துண்டாக்கிய கணவன்! 2 ஆண்டுகளாக நீடிக்கும் மர்மம்!

மம்தாவை உயிர்ப்பிக்க சுமார் ஒரு மணி நேரம் முதலுதவி மற்றும் இதய நுரையீரல் மீட்பு முயற்சிகளை மேற்கொண்டதாக நரேஷ் பட் கூறியுள்ளார். ஆனால், அவர் உயிரிழந்துவிட்டதை உணர்ந்த பின்னரும் அவசர உதவி எண்ணான 911-ஐ அழைக்கவில்லை.
Mamta Kafle Bhat murder case
Mamta Kafle Bhat murder case
Published on: 
Updated on: 
2 min read

அமெரிக்காவில் மனைவியைக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நரேஷ் பட், தனது மனைவியின் உடலை அறுத்துத் துண்டுகளாக்கியதை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். அதேநேரத்தில், மனைவியைக் கொலை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார். தனது மனைவி தற்கொலை செய்துகொண்டதாகவும், அவர் உயிரிழந்த பின்னரே உடலை மறைக்க முயன்றதாகவும் நரேஷ் பட் வாக்குமூலம் அளித்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மனைவியின் உடல் கண்டுபிடிக்கப்படாத நிலையில், விசாரணையின் போது அவர் அளித்துள்ள இந்த வாக்குமூலம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தில் நரேஷ் பட்டுக்கு எதிரான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. 39 வயதான நரேஷ் பட், 28 வயதான தனது மனைவி மம்தா காஃப்லே பட்டைக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் மம்தா காணாமல் போனார். அவரைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டபோது, தம்பதியினர் வசித்த வீட்டில் ரத்தக் கறைகள் உள்ளிட்ட சந்தேகத்திற்குரிய தடயங்கள் கிடைத்தன. இதையடுத்து நரேஷ் பட் கைது செய்யப்பட்டார். ஆனால், இன்றுவரை மம்தாவின் உடல் மீட்கப்படவில்லை.

நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்த நரேஷ் பட், 2024 ஜூலை 29-ம் தேதி இரவு தனது குழந்தையுடன் உறங்கச் சென்றதாகக் கூறியுள்ளார். மறுநாள் அதிகாலை சுமார் 4 மணியளவில் எழுந்தபோது, படுக்கைக்கு அருகே மம்தா அசைவற்ற நிலையில் கிடந்ததாகவும், அவரைச் சுற்றி வாந்தி இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். அந்த வாந்தியில் மாத்திரைகளின் பகுதிகள் இருந்ததாகவும், அருகில் செல்ஃபோஸ் என்ற அதிக நச்சுத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லி மருந்தின் பாக்கெட் கிடந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதனால் மம்தா தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்பதே தனது சந்தேகம் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மம்தாவை உயிர்ப்பிக்க சுமார் ஒரு மணி நேரம் முதலுதவி மற்றும் இதய நுரையீரல் மீட்பு முயற்சிகளை மேற்கொண்டதாக நரேஷ் பட் கூறியுள்ளார். ஆனால், அவர் உயிரிழந்துவிட்டதை உணர்ந்த பின்னரும் அவசர உதவி எண்ணான 911-ஐ அழைக்கவில்லை. இதற்கான காரணம் குறித்து வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பியபோது, தான் மிகவும் பயந்துவிட்டதாகவும், என்ன செய்வதென்று தெரியாமல் பதற்றமடைந்ததாகவும் அவர் பதிலளித்துள்ளார். இந்த விளக்கம் வழக்கின் முக்கியமான விவாதப் பொருளாக மாறியுள்ளது.

மனைவி உயிரிழந்துவிட்டதாகக் கருதிய பிறகு, அவரது உடலை எப்படியாவது மறைக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதாகவும் நரேஷ் பட் தெரிவித்துள்ளார். முதலில் உடலை பொடோமாக் ஆற்றில் வீசுவது குறித்து யோசித்ததாகவும், பின்னர் உடலை மறைப்பதற்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக ஹோம் டிப்போ என்ற கடைக்குச் சென்றதாகவும் கூறியுள்ளார். மேலும், இந்தச் சம்பவத்துக்குப் பிறகு தானும் தற்கொலை செய்துகொள்ள நினைத்ததாகவும், அதற்கான பொருட்களை வாங்கியபோதிலும் அந்த முடிவைச் செயல்படுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உடலைக் குப்பையில் வீச முடிவு செய்தபோது, அது முழுமையாகக் குப்பைப் பையில் அடங்கவில்லை என்று நரேஷ் பட் கூறியுள்ளார். இதையடுத்து வீட்டில் இருந்த அறுக்கும் கருவியைப் பயன்படுத்தி மம்தாவின் உடலைத் துண்டுகளாக்க முயன்றதாக ஒப்புக்கொண்டுள்ளார். குறிப்பாக, கால்களை உடலிலிருந்து பிரிக்க முயன்றதாகவும், ஆனால் முழுமையாகச் செய்ய முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். பின்னர் உடலைப் பல குப்பைப் பைகளில் அடைத்து குப்பையில் வீசியதாகவும், அது யாருக்கும் கிடைக்கக் கூடாது என்பதற்காகவே இவ்வாறு செய்ததாகவும் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

இந்த வழக்கில் போலீசார் ஏற்கெனவே பல்வேறு தடயங்களைச் சேகரித்துள்ளனர். தம்பதியினர் வசித்த வீட்டின் படுக்கையறை மற்றும் குளியலறையில் ரத்தக் கறைகள் இருந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தலைமுடித் துகள்கள் இருந்ததாகக் கூறப்படும் அறுக்கும் கருவியும் விசாரணையில் முக்கிய ஆதாரமாக இடம்பெற்றுள்ளது. அந்தக் கருவியில் கிடைத்த தடயங்கள் தொடர்பாக தடயவியல் நிபுணர்களும் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளனர். மம்தா தன்னுடைய குழந்தையை விட்டுவிட்டு தானாகவே வீட்டை விட்டு வெளியேறியிருக்க வாய்ப்பில்லை என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்த சாட்சியங்களையும் அரசு தரப்பு முன்வைத்துள்ளது.

நரேஷ் பட் மீது முதல் நிலைக் கொலை, உயிரிழந்தவரின் உடலைச் சிதைத்தல், உடலை மறைத்தல் ஆகிய மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த மூன்று குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்து வருகிறார். கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை வரை கிடைக்க வாய்ப்புள்ளது. மற்ற இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் தனித்தனி சிறைத்தண்டனைகள் விதிக்கப்படலாம். மம்தாவின் உடல் இதுவரை கிடைக்காததால், அவர் கொலை செய்யப்பட்டாரா, அப்படியானால் அதற்கு நரேஷ் பட்தான் காரணமா என்பதை நிரூபிப்பது அரசுத் தரப்புக்கு முக்கிய சவாலாக உள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இந்த வழக்கில், நரேஷ் பட்டின் தற்போதைய வாக்குமூலம் விசாரணைக்கு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. உடலைத் துண்டித்ததை ஒப்புக்கொண்டாலும், மனைவியின் மரணத்துக்குத் தான் காரணமல்ல என்ற அவரது வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளுமா என்பது இனிவரும் விசாரணையில் தெரியவரும். இறுதித் தீர்ப்பு வெளியாகும் வரை அவர் மீதான கொலைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாகக் கருத முடியாது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்