கோயம்புத்தூரைச் சேர்ந்த 23 வயதுடைய நவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் சென்னை, கிண்டி பகுதியில் தோழிகளுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை வேலைக்கு செல்ல தயாராவதற்காக அவர் தங்கியிருந்த வீட்டின் பாத்ரூமில் குளிக்க சென்றிருக்கிறார். அப்போது ஜன்னல் வழியே சிறிய வெளிச்சம் தெரிந்துள்ளது எனவே சந்தேகமடைந்து அருகில் சென்று பார்த்த போது ஒரு நபர் செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தது தெரிய வந்திருக்கிறது. எனவே உடனடியாக வெளியே சென்ற நவ்யா அந்த நபரின் செல்போனை பிடுங்கிய போது, தகாத வார்த்தைகளால் பேசி சத்தமிட்டுள்ளார்.
மேலும் நவ்யாவிடம் இருந்த செல்போனை பிடுங்க முற்பட்டபோது, அவர் கத்தி கூச்சலிடவே, அருகில் வசிப்பவர்கள் சத்தம் கேட்டு ஓடிவருவதை கண்ட அந்த நபர் தப்பி ஓடியுள்ளார். பின்னர் பாத்ரூம் அருகே பார்த்தபோது, அந்த நபர் மற்றொரு செல்போனையும் அங்கு வைத்திருந்தது தெரிய வரவே அதிர்ச்சியடைந்த நவ்யா 2 செல்போன்களையும் கைப்பற்றி J-3 கிண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் புகாரளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து J-3 கிண்டி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை செய்த போது, கழிப்பறை ஜன்னலில் போன் வைத்து வீடு எடுத்த அந்த நபர் 31 வயதுடைய முல்லைநாதன் என்பதும், அவர் திருத்துறைப்பூண்டி, திருவாரூர் மாவட்டம் என்பதும் தெரியவந்தது. மேலும் நவ்யா தங்கியிருந்த வீட்டிற்கு அருகில் முல்லைநாதன் நண்பர்களுடன் தங்கி வருவதும், ஏற்கனவே முல்லைநாதன் அங்குள்ள பெண்களின் பாத்ருமில் செல்போன் வைத்து வீடியோ எடுத்த போது பிடிபட்டதும் தெரியவந்தது.
பின்னர் முல்லைநாதனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து மேலும் இரண்டு செல்போன்களை கைப்பற்றிய நிலையில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். தொடர்ந்து அந்த செல்போன்களில் இருக்கும் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பரவாத வகையில் பாதுகாப்பாக வைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பெண்கள் தங்கியிருக்கும் பகுதியில் ஒருவர் பாத்ரூமில் இளம்பெண் குளிப்பதை ஜன்னல் வழியாக வீடியோ எடுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.