“போதை மறுவாழ்வு மையத்தில் பயங்கரம்” - 23 வயது இளைஞர் கத்தியால் குத்திக் கொலை…ஆபாசமாக பேசியதால் ஆத்திரம்!

பாபு மற்றும் சிவகுமார் ஆகிய இருவரையும் அடிக்கடி அவதூறாகப் பேசியதாகவும்...
Mangadu Rehabilitation Centre Murder
Mangadu Rehabilitation Centre Murder
Published on: 
Updated on: 
2 min read

சென்னை மாங்காடு அருகே செயல்பட்டு வரும் தனியாருக்குச் சொந்தமான போதை மறுவாழ்வு மையத்தில், 23 வயது இளைஞர் கழுத்தில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞரைக் கொலை செய்ததாக, அதே மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று பின்னர் அங்கேயே பணியாற்றி வந்த இருவரை மாங்காடு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாங்காடு, சக்கரா நகர் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான போதை மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் 100-க்கும் மேற்பட்டோர் போதைப் பழக்கத்திலிருந்து மீள்வதற்காகத் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், திருவொற்றியூரைச் சேர்ந்த 23 வயதுடைய நிஷாந்த் என்பவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானதால், கடந்த ஆறு மாதங்களாக இந்த மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதே மையத்தில் சிகிச்சை பெற்று, பின்னர் போதைப் பழக்கத்திலிருந்து மீண்டதாகக் கூறப்படும் 55 வயதுடைய பாபு, மற்றும் 57 வயதுடைய சிவகுமார் ஆகிய இருவரும் அங்கேயே பணியாற்றி வந்துள்ளனர். நிஷாந்த், பாபு மற்றும் சிவகுமார் ஆகிய இருவரையும் அடிக்கடி அவதூறாகப் பேசியதாகவும், அவர்களது குடும்பத்தினரைப் பற்றி ஆபாசமாகப் பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த இருவரும், மையத்தின் சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து நிஷாந்தின் கழுத்தில் சரமாரியாகக் குத்தியதாகத் தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த நிஷாந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மாங்காடு போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், நிஷாந்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், கொலைச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் பாபு மற்றும் சிவகுமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, இதே போதை மறுவாழ்வு மையத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு தங்கி சிகிச்சை பெற்று வந்த 30-க்கும் மேற்பட்டோர், காவலாளியைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. தற்போது இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, இந்த மையத்தின் ஆவணங்கள் முறையாக உள்ளனவா, விதிமுறைகளின்படி மையம் செயல்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் செயல்பட்டு வரும் இந்த மையத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாகத் தணிக்கை செய்ய வேண்டும் என்றும் அப்பகுதியில் கோரிக்கை வைக்கப்படுகிறது.

மேலும், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி இங்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், இதனால் மையத்தில் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரப்பூர்வ விசாரணைக்கு பிறகு உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகும். போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் நிலையில், மையத்தின் செயல்பாடுகள் குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com