“13 வயது சிறுமியை தனியாக அழைத்து பாலியல் அத்துமீறல்” - அழுதுகொண்டே தாயிடம் கூறிய மாணவி.. சுதந்திரமாக நடமாடிய குற்றவாளி!

அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்ட போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்...
“13 வயது சிறுமியை தனியாக அழைத்து பாலியல் அத்துமீறல்” - அழுதுகொண்டே தாயிடம் கூறிய மாணவி.. சுதந்திரமாக நடமாடிய குற்றவாளி!
Published on: 
Updated on: 
2 min read

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உறவினர் வீட்டிற்கு வந்த இடத்தில், 13 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகக் கூறப்படும் நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதற்கிடையே, காவல் நிலையத்தில் இருந்தபோது அவர் பாத்ரூமுக்குச் சென்ற இடத்தில் தவறி விழுந்ததில் கை முறிவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், அவர் மீது ஏற்கனவே பாலியல் குற்றம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு அருகே உள்ள கல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் தனது உறவினரைப் பார்ப்பதற்காக விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எம். புதுப்பாக்கம் கிராமத்திற்கு வந்துள்ளார். அப்போது உறவினர் வீட்டில் சிறுமி ஒருவர் விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, 13 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி தனியாக அழைத்துச் சென்ற வெங்கடேஷ், அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வன்கொடுமை செய்ய முயன்றதாகப் புகார் எழுந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, உடனடியாக அங்கிருந்து வெளியேறி அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் அழுதுகொண்டே தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் தாய் மரக்காணம் காவல் நிலையத்தில் சிறுமியிடம் அத்துமீறிய வெங்கடேஷ் மீது புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், வெங்கடேஷைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே, வெங்கடேஷ் பாத்ரூமுக்குச் சென்றபோது தவறி விழுந்ததில் அவருக்குக் கை முறிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவருக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், வெங்கடேஷ் மீது ஏற்கனவே பாலியல் குற்றம் தொடர்பான வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்ட போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். உறவினர் வீட்டிற்கு வந்த இடத்தில் 13 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அப்பகுதி மக்கள் பாலியல் குற்றவாளியை சுதந்திரமாக நடமாட விட்டதே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.