இரவில் நடமாடும் மங்கி தொப்பி கொள்ளையர்கள்...அச்சத்தில் கரூர் மக்கள்!

இரவில் நடமாடும் மங்கி தொப்பி கொள்ளையர்கள்...அச்சத்தில் கரூர் மக்கள்!

கரூரில் இரவு நேரத்தில் மங்கி தொப்பியுடன், சட்டை அணியாமல் வீட்டின் சுவர் ஏறி குதித்து கொள்ளையில் ஈடுபட்டு வரும் முகமூடி கொள்ளையர்களின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். 

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்ககேட் அருகில் உள்ள ஆதி மாரியம்மன் நகர் பகுதியில் கடந்த 22ம் தேதி நள்ளிரவில் மர்ம நபர்கள் 3 பேர் தெருக்களில் வித்தியாசமான முறையில் நடந்து செல்லும் சி.சி.டி.வி கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

அந்த வீடியோவில்,  3 பேர் தலையில் மங்கி கேப், கையில் கிளவுஸ், மேலாடை அணியாமல் இடுப்பில் வேட்டியை சுருட்டி கட்டிக்கொண்டு, கால்களில் கருப்பு நிறத்தில் எதையோ பூசிக் கொண்டு தெருக்களை நோட்டமிடுகின்றனர். 

பின்பு, அங்கிருந்த ஒரு வீட்டின் சுற்றுச் சுவர் மேல் ஏறி குதித்து வீட்டின் பக்கவாட்டில் நடந்து செல்லும் மர்மநபர் ஒருவர், அங்குள்ள 2 கதவுகளையும் திறந்து கொள்ளையடிக்க முயற்சி செய்கிறார், ஆனால் அவை திறக்கப்படாததால் சுவர் ஏறி குதித்து தப்பி விடுகிறார். இந்த  காட்சிகள் அனைத்தும் சி.சி.டி.வி கேமராக்களில் பதிவாகியுள்ளது. 

இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தால் கரூர் மாநகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com