“1.5 லட்சம் பணத்துக்காக பெட்ரோல் பங்க் ஊழியர் கொலை” - குளம் போல் தேங்கி இருந்த ரத்தம்.. 24 மணி நேரத்தில் சிக்கிய 3 குற்றவாளிகள்!

அவர் பெட்ரோல் பங்க் வளாகத்தில் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்...
Mettupalayam Petrol Bunk Murder
Mettupalayam Petrol Bunk Murder
Published on: 
Updated on: 
2 min read

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே செயல்பாட்டில் இல்லாத தனியார் பெட்ரோல் பங்கில் பராமரிப்பாளராகப் பணியாற்றி வந்த வினோத் பாலாஜி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.1.5 லட்சம் பணத்தை வினோத் பாலாஜி தராமல் ஏமாற்றி வந்ததாகவும், இதனால் ஏற்பட்ட தகராறில் அவரைக் கொலை செய்ததாகவும் கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் செல்லும் சாலையில் செயல்பாட்டில் இல்லாத தனியார் பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. இந்த பெட்ரோல் பங்கில் பராமரிப்பாளராக வினோத் பாலாஜி என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் (நவ 22) அவர் பெட்ரோல் பங்க் வளாகத்தில் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த காரமடை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, வினோத் பாலாஜியின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், கொலை நடந்த இடத்தில் தடயங்களைச் சேகரித்து, கொலையாளிகள் யார் என்பது குறித்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இதற்கிடையே, சம்பவ இடத்துக்கு வந்த கோவை சரக காவல்துறை டிஐஜி சுவாமிநாதன், கொலையாளிகளை விரைந்து கைது செய்ய 6 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார். இதையடுத்து, தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி, கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இன்று(நவ 24) விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதிபாசு (36), வினோத் (23), சோனை (37) ஆகிய மூன்று பேரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

Mettupalayam Petrol Bunk Murder
Mettupalayam Petrol Bunk Murder

அப்போது, வினோத் பாலாஜி தங்களுக்கு சுமார் ரூ.1.5 லட்சம் பணம் தர வேண்டியிருந்ததாகவும், அந்தப் பணத்தை அவர் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாகவும் மூவரும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில், மூவரும் சேர்ந்து வினோத் பாலாஜியைக் கொலை செய்ததாக விசாரணையில் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மூவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேட்டுப்பாளையத்தில் செயல்பாட்டில் இல்லாத பெட்ரோல் பங்கில் நடைபெற்ற இந்தக் கொலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், 6 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்திய போலீசார், 24 மணி நேரத்துக்குள் சந்தேக நபர்களைக் கண்டறிந்து கைது செய்த நிலையில் சமூக ஆர்வலர்கள் காவலர்களின் இந்த துரித செயல்பாட்டை பாராட்டி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்