சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கூனாண்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரத்தினவேல். லாரி ஓட்டுநராக பணியாற்றி வரும் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுபாஷினி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் சுபாஷினிக்கு அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பாளை வந்த நிலையில் இவர்களது பழக்கமானது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. இதனை தொடர்ந்து இருவரும் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி, சுபாஷினி அதே பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவருடன் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் ரத்தினவேல் குடும்பத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தனது மனைவியை காணவில்லை என ரத்தினவேல் மேச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அதே நாள் இரவு பிரபாகரனின் தந்தையான சம்பத், கூனாண்டியூர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள கடைக்கு வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருள் வாங்க கடைக்கு சென்றிருக்கிறார். அங்கு வந்த ரத்தினவேல் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து சம்பத்தை வழிமறித்து பின்னர் அவரை அருகிலிருந்த மின்கம்பத்தில் கட்டி வைத்து, இரும்புக் கம்பி மற்றும் தடிகளால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் சம்பத் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தார்.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அவரை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரத்தினவேல், அறிவழகன், விஜயகுமார், சண்முகம், வெற்றிவேல், கோவிந்தசாமி, சின்னதுரை, சாமிதுரை, சக்திவேல் உள்ளிட்ட 11 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த வழக்கு மேட்டூர் சார்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் பாலாஜி ஆஜராகி வாதாடினார். விசாரணை நடைபெற்று வந்த காலத்தில் வழக்கில் தொடர்புடைய கிருஷ்ணன் மற்றும் ராஜ் ஆகியோர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தனர்.
இந்த வழக்கு நேற்று மேட்டூர் சார்பு நீதிமன்ற நீதிபதி சரவணபாபு முன்னிலையில் இறுதி விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை ஆய்வு செய்த நீதிபதி, குற்றம் நிரூபிக்கப்பட்ட ரத்தினவேல் உள்ளிட்ட 9 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அனைவருக்கும் சேர்த்து ரூ.16 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். கள்ளக்காதல் விவகாரத்தில் பழிவாங்கும் நோக்கில் குற்றமற்ற ஒருவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கிய சம்பவத்தில், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பு மேட்டூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.