
தூத்துக்குடி, பாத்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா (45), பில்டிங் காண்ட்ரக்டர். மனைவி ஆன்சி (43), இத் தம்பதியின் 12 வயதான மகள் தனியார் பள்ளியில் 8 -ம் வகுப்பு படித்து வருகிறார். குடும்ப பிரச்னை காரணமாக கணவர் ராஜா தனியாக வசித்து வரும் நிலையில், ஆன்சி மற்றும் அவரது மகள் ஆகிய இருவரும் பாத்திமா நகர் பகுதியில் தனியாக வசித்து வருகிறார்கள்.
ஆன்சி கடந்த சில வருடங்களுக்கு முன்பு வேறு சில நபர்களிடம் லட்சக் கணக்கில் (உறவினர்கள் உட்பட) பணம் வாங்கி கூடுதலாக வட்டி தொழில் செய்து வந்துள்ளார். அப்போது கொரோனா கால கட்டம் என்பதால் ஊரடங்கு மற்றும் தொழில் வளர்ச்சி இல்லாததால் இவர் வட்டிக்கு கொடுத்த பணத்தை திரும்ப வாங்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில் ஆன்சி-க்கு வட்டிக்கு கொடுத்த உறவினர்கள் பணத்தை திரும்ப கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தூத்துக்குடி பூபாலராயர் புரத்தில் வசித்து வரும் ஆன்சி-யின் உடன் பிறந்த தம்பியான ஆண்டோஎன்பவரும் பணத்தைக் கேட்டு துன்புறுத்தி வந்துள்ளாராம்.
அதாவது, ஆண்டோ-விடம் ஆறு லட்சம் பணம் வாங்கியதாக கூறப்படும் நிலையில், இவர் வட்டிக்கு மேல் வட்டி போட்டு 22 லட்சம் ரூபாய் பணத்தை கேட்டுள்ளாராம். மேலும் ஆன்சி-யின் கணவர் தொழில் செய்யும் இடத்திற்கு சென்று பணத்தைக் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஆன்சி இது குறித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், டிஎஸ்பி அலுவலகம், தெற்கு காவல் நிலையத்திலும் புகார் மனு அளித்துள்ளார். மேலும், கடந்த ஒரு வார காலமாக ஆன்சியை தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டல் விடுத்து வந்துள்ளாராம் அவரது தம்பி அண்டோ,
இந்த நிலையில், நேற்று மாலை ஆன்சி தற்கொலை முயற்சி மேற்கொள்வதற்காக பூச்சி மருந்து ஒன்றை வீட்டில் வாங்கி வைத்துள்ளார். பின்னர் அருகே உள்ள தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது அங்கு ஆன்சி-யின் மகள் மயக்கமடைந்த நிலையில் இருந்துள்ளார். பின்னர் அவரை தண்ணீர் தெளித்து எழுப்பியும் எழுந்திருக்காத நிலையில், அவர் பூச்சி மருந்தை குடித்தது பின்னர் தெரியவந்துள்ளதை தொடர்ந்து, அதிர்ச்சியடைந்த ஆன்சி மற்றும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக சிறுமியை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர். தற்போது சிகிக்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது குறித்து ஆன்சி செய்தியாளர்களிடம் கூறும்போது, “எனது தம்பி ஆண்டோ ஒரு வார காலமாக பணம் கேட்டு மிரட்டி வருகின்றார். இதனால் நான் தற்கொலை செய்ய இருந்த நிலையில் எனது மகள் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்கு முன்பு இரண்டு தடவை தூக்க மாத்திரைகள் உட்கொண்டு நானும் தற்கொலைக்கு முயன்று அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தேன். இனி என்னால் உயிர் வாழ முடியாது என்று நினைத்து பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று எண்ணியுருந்தேன். ஆனால் எனது மகள் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இனியும் காவல்துறை வேடிக்கை பார்த்தால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வதை தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை. ஆகவே காவல்துறை உடனடியாக எனது தம்பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.