

இந்தியா முழுமைக்கும் போதைப்பொருள் கலாச்சாரம் பெறுகிற வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே போதைப்போருள் பழக்கம் பெருகி வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. அதிலும் ‘கஞ்சா’ என்கிற போதைப்பொருள் எளிதில் மாணவர்களை தொற்றிக்கொண்டு விடுகிறது.
மேலும் சிறுவர்களுக்கு இது எப்படி எளிதில் கிடைக்கிறது என்ற கேள்வியையும் உருவாக்காமல் இல்லை. மேலும், சிறுவயதிலே போதைக்கு அடிமையாகும் சிறுவர்கள் 23,24 -வயதுக்குள்ளாகவே தங்களின் வாழ்வையே சூனியமாக்கி விடுகின்றனர். மேலும் இவர்கள்தான் வாழ்வில் எந்த பிடிப்பும் இன்றி,யார் மீதும் அன்பும் அக்கறையுமின்றி தங்களின் சுயநலத்தை மட்டுமே முன்னிறுத்தி,
சமூகத்திற்கும் மனித குலத்திற்கும் எதிரான செயலில் ஈடுபடுகின்றனர். மேலும், இம்மாதிரியான ஆண்கள் வளரும்போதே வக்கிர மனநிலையுடன் வளருவதால், பழிவாங்கும் எண்ணமும் வக்கிர புத்தியும் மேலோங்கியவர்களாக பெண்களுக்கு எதிரான காரியங்களில் ஈடுபடக்கூடியவர்களாக இருக்கின்றனர்.
இதில் பெற்றோர்களுக்கும் பங்கு உண்டு என்பதை மறுக்க முடியாது. ஏனெனில் சமூகம் பல்வேறு முரண்களால் நிறைந்துள்ளது. குழந்தைகள் எதோ ஒரு அறியாமையாலும், ஆர்வத்தாலுமே இத்தகு காரியங்களில் ஈடுபடுகின்றனர். அவர்களை ஒழுங்கமைத்து சீரான வாழ்வியலையும், நெறியான பாதையையும் காட்டுவது பெற்றோரின் தலையாய கடமையாகும். ஜாதிய, குடும்ப பெருமைகளை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதில்,காட்டும் முனைப்பை இந்திய பெற்றோர் குழந்தைகளுக்கு நன்மதிப்பை சொல்லிக்கொடுப்பதிலும் காட்டினால் இதுபோன்ற குற்றங்கள் குறையலாம்.
சில தினங்களுக்கு முன்னர் விருதுநகர், ஒண்டிப்புலி பகுதியில் கஞ்சா பயன்படுத்திய நபர்கள் குறித்து தகவல் தெரிவித்த சிறுவர்களை கொடூரமாக தாக்கும் நபர்களின் வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் அந்த வீடியோவில் இருக்க கூடியவர்கள் அனைவரும் 18 -வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் என்பதுதான் மிகப்பெரும் சோகம்.
விருதுநகர் அருகே ஒண்டிப்புலி நாயக்கனூர் கிராமத்தில் சிறுவர்கள் கஞ்சா பயன்படுத்தியது குறித்து அதே பகுதியைச் சார்ந்த வேறு சில சிறுவர்கள் வீட்டிற்கு தெரிவித்ததாகவும் இதனால் ஆத்திரமடைந்த சிறுவர்கள் தாங்கள் கஞ்சா பயன்படுத்தியது குறித்து எதற்காக வீட்டில் கூறினாய் என அந்த இரண்டு சிறுவர்களையும் கெட்ட வார்த்தையால் திட்டி, கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தமிழகத்தில் தற்போது தமிழகத்தில் கஞ்சா விற்பனை அதிகரித்து வரும் நிலையில் சிறுவர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகி வீட்டிற்கு தெரிவித்த சிறுவர்களை தாக்கும் வீடியோ இணையதளங்களில் வைரல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசும், காவல்துறையும் இந்த விவகாரங்களை கையிலெடுத்து சிறார்களுக்கு கஞ்சா விற்பனை செய்த நபர்களை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் வலுத்துள்ளது.
கொடூரமாக தாக்குதலில் ஈடுபட்ட சிறுவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தாமல் இருதரப்பையும் அழைத்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் காவல்துறையினர், இது மேலும் பலகாலத்திற்கான வெறுப்பையும், பகைமையும் வளர்க்குமே தவிர தீர்வை தராது. இந்த தாக்குலை நிகழ்த்திய மாணவர்களுக்கு உரிய மனநல ஆலோசனை வழங்கி, இந்த பிரச்னைக்கு நிறைந்த தீர்வு காண வேண்டும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.