“கொலை செய்து சடலத்துடன் ஊர் சுற்றிய நபர்” - குடும்பத்தினரிடம் போட்ட நாடகம்.. கார் பயணத்தால் வெளிவந்த உண்மை!

சசிகலா தனது கணவரின் மருத்துவச் செலவுக்காக சுமார் 10 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரம் பணத்தை எடுத்து...
dharmapuri murder
dharmapuri murder
Published on
Updated on
2 min read

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வெங்கடசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த அசோகன் என்பவரது மனைவி 52 வயதுடைய சசிகலா. வளையல் வியாபாரம் செய்து வந்த சசிகலாவுக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்ட நிலையில், சசிகலா தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த (ஆகஸ்ட் 15) ஆம் தேதி காலை வீட்டில் இருந்த சசிகலா திடீரென மாயமானார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது கணவர் அசோகன், பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிகலாவை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

விசாரணையில், சசிகலா மாயமான நாளன்று அவரது மூத்த மகள் உமாமகேஸ்வரியின் கணவர் அஸ்லாம், அவரை காரில் அழைத்துச் சென்றது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அஸ்லாமிடம் விசாரணை நடத்த போலீசார் முயன்றபோது, அவர் திடீரென தலைமறைவானதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த தனிப்படை போலீசார், அஸ்லாமை தேடி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அஸ்லாம் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் தீவிரமாக விசாரித்ததில், அவர் சசிகலாவை கொலை செய்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சசிகலாவின் மருமகனான அஸ்லாம், கடன் பிரச்சினையில் சிக்கியிருந்ததாகவும், தனது மாமியாரிடம் பணம் மற்றும் நகைகள் இருப்பதை அறிந்து அவற்றை கொள்ளையடிக்க திட்டமிட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தன்று சசிகலாவின் கணவர் அசோகன் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி, அவரை காரில் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது சசிகலா தனது கணவரின் மருத்துவச் செலவுக்காக சுமார் 10 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரம் பணத்தை எடுத்துச் சென்றதாக தெரிகிறது. காரில் சென்றபோது, நகை மற்றும் பணத்தை அஸ்லாம் கேட்டதாகவும், சசிகலா அவற்றை கொடுக்க மறுத்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் போலீசார் கூறுகின்றனர்.

Admin

இதையடுத்து ஆத்திரமடைந்த அஸ்லாம், நைலான் கயிற்றால் சசிகலாவின் கழுத்தை இறுக்கியதாகவும், இதில் அவர் உயிரிழந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் சசிகலாவின் உடலை காரில் வைத்துக்கொண்டு பகல் முழுவதும் சுற்றிய அஸ்லாம், இரவு நேரத்தில் வாணியம்பாடி அருகே செயல்படாமல் இருந்த கல் குவாரி பகுதிக்கு உடலை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு சசிகலாவின் கழுத்தில் நைலான் கயிற்றால் பெரிய கல் கட்டப்பட்டு, உடல் குவாரி குளத்தில் வீசப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் நடத்திய தேடுதல் பணியில் குவாரி குளத்தில் இருந்து சசிகலாவின் உடல் மீட்கப்பட்டது. அவரது தலை மற்றும் முகத்தில் காயங்கள் இருந்ததாகவும், உடலில் கல் கட்டப்பட்டிருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்‌ஷய் அனில் வாகரே நேரில் விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து அஸ்லாமை போலீசார் கைது செய்தனர். மேலும், சசிகலாவின் உடலை அப்புறப்படுத்த அஸ்லாமுக்கு உதவியதாக கூறப்படும் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களான பூபால் மற்றும் நவீன் ஆகியோரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, அஸ்லாம் ஏற்கனவே சசிகலாவின் வீட்டில் இருந்து சுமார் 5 சவரன் தங்க நகைகளை திருடியதாகவும், இதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த முன்விரோதமும் கொலைக்கான காரணங்களில் ஒன்றா என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாயமான 52 வயது வளையல் வியாபாரி கொலை செய்யப்பட்டு, கழுத்தில் கல் கட்டி குவாரி குளத்தில் வீசப்பட்ட சம்பவம் பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com