

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டதாக கூறப்படும் வழக்கில், அவரது தாயார் உட்பட நான்கு பேரைக் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்துள்ளது காவல்துறை.
டேராடூன் சகஸ்திரதாரா சாலையைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர், பண தேவைக்காக தனது 15 வயது மகளை ரூ.1.5 லட்சத்திற்கு விற்றதாக கோரப்படும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் முழுத் தொகையும் கிடைக்காததால் கடந்த மாதம் காவல்துறையில் பொய்யான கடத்தல் புகார் கொடுத்துள்ளார். மேலும், அந்தப் புகாரின் அடிப்படையில், ராஜ்பூர் காவல் நிலையத்தில் BNS சட்டத்தின் பிரிவு 137(2)-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணையின் போது, உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில் அந்தப் பெண்ணை காவல்துறை கண்டுபிடித்துள்ளது. காவல்துறை அந்த 15 வயது சிறுமியை பத்திரமாக மீட்டதுடன், மேலும் இந்த வழக்கு தொடர்பாக 37 வயதான மனிஷ் மற்றும் 24 வயதான லவி குமார் ஆகிய இரு குற்றவாளிகளையும் கைது செய்தது. குற்றம் சாட்டப்பட்டவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், லவி குமார் என்பவர் 37 வயதான பிங்கி மாலிக் என்ற பெண் மூலம் அந்தச் சிறுமியை அவளது தாயிடமிருந்து 1.5 லட்சம் ரூபாய்க்கு வாங்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர், திருமணம் செய்து வைக்கும் நோக்கத்தில் அந்தச் சிறுமியை மணீஷிடம் 2 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளார்.
காவல் நிலைய அதிகாரியின் கூற்றுப்படி, போலீசார் புகார் கொடுத்த அந்த சிறுமியின் தாயையும் கைது செய்துள்ளனர். தாயிடம் நடத்திய விசாரணையில் முன்னுக்குப் பின்னான பதில்களால் மகளை பணத்திற்காக விற்றது வெளிசத்திற்கு வந்துள்ளது. பின்னர் சிறுமியை 1.5 லட்சம் ரூபாய்க்கு விற்றதையும், பிங்கியிடமிருந்து 80,000 ரூபாய் மட்டுமே கிடைத்ததால் பொய்யான கடத்தல் புகார் அளித்ததையும் தாய் ஒப்பு கொண்டுள்ளார்.
இந்த வழக்கின் மற்ற அம்சங்களையும் காவல்துறை விசாரித்து வருவதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் கடந்த காலங்களில் இது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்களா? என்பதை குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்