
திருப்பத்தூரில் கள்ளக்காதலை தட்டி கேட்ட மனைவியை கொலை செய்து விட்டு, தற்கொலை என நாடகமாடிய கணவன் மற்றும் அவரது பெற்றோரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியைச் சேர்ந்த சிலம்பரசன் - பிரியங்கா தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம்பரசன் வேலைக்கு சென்ற இடத்தில் அனிசியா என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு, அப்பெண் 5 மாத கர்ப்பிணி ஆகியுள்ளார். இதனை அறிந்த பிரியங்கா கணவரின் கள்ளக்காதலை தட்டி கேட்டதால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் பிரச்சினை அதிகமாகவே, சிலம்பரசன், அவரது தந்தை ரவிசந்திரன் மற்றும் தாயார் கலா ஆகியோர் சேர்ந்து, பிரியங்காவை கழுத்தை நெரித்துக் கொன்று விட்டு, உடலை மின்விசிறியில் தூக்கு மாட்டி இறந்ததுபோல் தொங்க விட்டுள்ளனர்.
பின்னர் பிரியங்கா தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தாருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், பிரியங்காவின் உடலில் காயங்கள் இருந்ததைக் கண்ட அவரது தந்தை ராஜா, தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், சிலம்பரசன் குடும்பத்தாரை விசாரித்த போது உண்மை வெளியானது. இதனையடுத்து மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.