
திருநெல்வேலி மாவட்டம், நெல்லை டவுன் சுந்தரர் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மகன் வெங்கடேஷ் என்ற 19 வயதுடைய ஆனந்த். தாய்-தந்தை இறந்து விட்ட நிலையில் வெங்கடேஷ் கூலி வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம்(செப் 06) நள்ளிரவு 12 மணியளவில் வெங்கடேஷ் தனது நண்பர்கள் இரண்டு பேருடன் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு உள்ள ஒரு டீக்கடையில் டீ குடிக்க வந்துள்ளார். அப்போது அங்கிருந்த 3 பேர் கொண்ட கும்பல், அனந்தை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் முன் விரோதத்தில் அவரை நெல்லை டவுன் வயல் தெருவைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 2 பேர் உள்பட 3 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து சம்பவம் நடந்த 5 மணி நேரத்தில் கொலையாளிகளான பள்ளி மாணவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்த நிலையில், அவர்களிடம் நடத்திய விசாரணையில் அடிப்படையில் முக்கிய கொலையாளியான 19 வயதுடைய இசக்கிராஜா என்பவரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கடந்த சில நாட்களுக்கு முன்பு டவுன் பகுதியில் வெங்கடேஷ் தனது நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மீனாட்சிபுரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரின் மோட்டார் சைக்கிளானது, வெங்கடேசன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வெங்கடேசன் மோட்டார் சைக்கிளில் சிறிது சேதம் ஏற்பட்டதாகவும், அதற்கு அபராதமாக ரூ.10 ஆயிரம் கண்டிப்பாக தரவேண்டும் என்றும் மீனாட்சிபுரம் வாலிபரிடம் வெங்கடேஷ் வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக அந்த வாலிபர் இசக்கிராஜாவின் சித்தப்பா மகனான பிளஸ்-2 படிக்கும் சிறுவனை நாடியுள்ளார்.
உடனே இசக்கி ராஜாவும், அந்த சிறுவனும் சேர்ந்து வெங்கடேஷிடம் சமாதானம் பேசி உள்ளனர். ஆனால் வெங்கடேஷ் தரப்பு சமாதானம் ஆகாமல் ரூ.10 ஆயிரத்தை வசூலித்து விட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அந்த சிறுவன் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வெங்கடேஷ் தனது நண்பர்களுடன் டீக்கடைக்கு செல்லவே, அங்கு ஏற்கனவே இசக்கிராஜாவின் உடன்பிறந்த தம்பியுடன், பிளஸ்-2 படிக்கும் சிறுவன் நின்று கொண்டிருந்தான். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் கைகலப்பு ஏற்படவே, சிறுவன் உடனடியாக இசக்கி ராஜாவுக்கு போன் செய்து ரெயில் நிலையத்திற்கு வருமாறு அழைத்துள்ளார்.
வீட்டில் இருந்த இசக்கிராஜா அரிவாளுடன் அங்கு சென்று வெங்கடேசை தட்டிக்கேட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றியதால் மூவரும் சேர்ந்து வெங்கடேசை சரமாரி வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இசக்கிராஜா கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் 2 சிறுவர்களையும் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.