

ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமான பெண்ணை வீட்டிற்கு அழைத்த விவகாரத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவின் சந்திரா லேஅவுட் பகுதியில் கடந்த அக்டோபர் 22-ம் தேதி இந்தச் சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் உரிமையாளரும் அவரது மனைவியும் வெளியூருக்குச் செல்லும்போது, வீட்டின் சாவியை தனது நண்பரிடம் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளனர்.
அப்போது வீட்டில் தனியாக இருந்த அந்த நபர், ஆன்லைன் டேட்டிங் ஆப் ஒன்றைப் பயன்படுத்தி, அதில் பெண் ஒருவருடன் பழகி தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். அதன்படி ஒரு பெண்ணும் முகமூடி அணிந்தவாறு வீட்டிற்கு வந்துள்ளார். அறைக்கு வந்த அந்த பெண் தனது முகமூடியை அகற்றியபோது தான் தெரியவந்துள்ளது அவர் ஒரு திருநங்கை என்பது. இதனால் அதிர்ச்சியடைந்த நபர் அவரை வெளியில் போகச்சொல்லி கேட்டுள்ளார். இதற்கிடையே, சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு மற்றொரு திருநங்கையும் அங்கு வந்துள்ளார்.
பின்னர் இருவரும் சேர்ந்து வீட்டில் இருந்த நபரை கத்தியைக் கொண்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து படுக்கை அறை கதவை உடைத்து உள்ளே சென்ற திருநங்கைகள், அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். அவர்கள் கொள்ளையடித்த நகைகளின் மொத்த எடை 226 கிராம் என்றும், அதன் மதிப்பு சுமார் ரூ.20 லட்சம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, வெளியூர் சென்றிருந்த வீட்டின் உரிமையாளர் திரும்பி வந்து பார்த்தபோது நடந்த சம்பவம் குறித்து அறிந்துள்ளார். இதையடுத்து உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், நசியா மற்றும் சையத் மௌஷின் என அடையாளம் காணப்பட்ட இருவரையும் கைது செய்துள்ளனர். இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆன்லைன் டேட்டிங் செயலி மூலம் ஏற்பட்ட அறிமுகத்தைப் பயன்படுத்தி, வீட்டில் இருந்த நகைகளைக் கொள்ளையடித்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.