கணவர் கண்முன்னே துடிதுடிக்க வெட்டிக்கொலை! சொத்து தகராறில் சொந்த அண்ணனின் வெறிச்செயல்.. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!

உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு
கள்ளக்குறிச்சி
Published on
Updated on
2 min read

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே, சொத்து தகராறில் உடன்பிறந்த சகோதரியை மிளகாய் பொடி தூவி கொடூரமாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள பெண்ணின் அண்ணன் மற்றும் அவருடன் வந்ததாகக் கூறப்படும் கூலிப்படை கும்பலை போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

சங்கராபுரம் பேரூராட்சி அலுவலகம் செல்லும் சாலை அருகே வசித்து வந்தவர் தீபா. இவரது கணவர் பாபு. தம்பதியருக்கு யஷ்வந்த் குமார் மற்றும் யோகபிரவீன்குமார் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தீபாவின் தந்தை ராஜேந்திரன், பேரூராட்சி அலுவலகம் அருகே தனக்குச் சொந்தமான 80 சென்ட் நிலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது பேரன்களான தீபாவின் மகன்கள் பெயரில் தானமாக எழுதி வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது.

இந்த நிலத்தை தனக்கே எழுதித் தர வேண்டும் என்று தீபாவின் உடன்பிறந்த அண்ணன் காந்தகுமார் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகவும், இதுதொடர்பாக அண்ணன் மற்றும் தங்கை இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த பிரச்சனை வெகு நாட்களாக நீடித்து வந்த நிலையில், சம்பவத்தன்று காந்தகுமார் ஆறு பேர் கொண்ட கும்பலுடன் அவரது தங்கை தீபாவின் வீட்டிற்கு சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அப்போது சொத்து தொடர்பாக மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், ஒரு கட்டத்தில் தகராறு கைகலப்பாக மாறியதாகவும் கூறப்படுகிறது. அப்போது காந்தகுமார், மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை தீபாவின் முகத்தில் தூவியதாகவும், பின்னர் கூரிய ஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். தாக்குதலை தடுக்க முயன்ற தீபாவின் கணவர் பாபுவையும் அந்த கும்பல் கடுமையாக தாக்கியுள்ளது.

பலத்த காயமடைந்த தீபா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். மேலும் கைகள் துண்டாக வெட்டப்பட்டு தலையில் படுகாயங்களுடன் மயங்கி கிடந்த தீபாவின் கணவர் பாபுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து தகவலறிந்த சங்கராபுரம் காவல் ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீபாவின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

தலைமறைவாக உள்ள காந்தகுமார் மற்றும் அவருடன் வந்ததாகக் கூறப்படும் நபர்களை கைது செய்ய திருக்கோவிலூர் உட்கோட்ட டிஎஸ்பி பார்த்திபன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். உடன்பிறந்த தங்கை வென்றும் பார்க்காமல், சொத்து தகராறில் கொடூர தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் இந்த சம்பவம் சங்கராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கொலைக்கான பின்னணி, இதில் தொடர்புடைய மற்ற நபர்கள் மற்றும் தாக்குதலின் முழு சூழ்நிலை குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com