“ரூ.100 கோடி பழனி நில மோசடி வழக்கு..” - சிறையில் இருந்த வழக்கறிஞர் திடீர் மரணம்.. விசாரணை முடிந்த சில மணி நேரத்தில் நடந்தது என்ன?

நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. இந்த நிலையில், நேற்று இரவு மதுரை மத்திய சிறையில்...
“ரூ.100 கோடி பழனி நில மோசடி வழக்கு..” - சிறையில் இருந்த வழக்கறிஞர் திடீர் மரணம்.. விசாரணை முடிந்த சில மணி நேரத்தில் நடந்தது என்ன?
Published on
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்டம் பழனி சன்னதி வீதியில், தண்டாயுதபாணி கோவில் மடத்திற்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான 1 ஏக்கர் 20 சென்ட் நிலத்தை ரூ.2 கோடிக்கு பத்திரப்பதிவு செய்ததாக எழுந்த புகாரில், சிபிசிஐடி போலீசார் 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மதுரை மத்திய சிறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில் மடத்திற்குச் சொந்தமான நிலத்தை முறைகேடாக குறைந்த விலைக்கு பத்திரப்பதிவு செய்ததாக கூறப்படும் இந்த வழக்கில், அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், நிலத்தை எழுதி வாங்கிய சேதுபதி வெள்ளைச்சாமி, வழக்கறிஞர் அன்வர்தீன், பத்திரப்பதிவு செய்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், இடைத்தரகராக செயல்பட்ட ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் உள்ளிட்ட 13 பேர் மீது திண்டுக்கல் மாவட்ட சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முருகதாஸ், சேதுபதி வெள்ளைச்சாமி, அன்வர்தீன் மற்றும் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து, சிபிசிஐடி போலீசார் நான்கு பேரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து, நேற்று பிற்பகல் 3 மணியளவில் நான்கு பேரும் மீண்டும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே, வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த வழக்கறிஞர் அன்வர்தீனுக்கு ஏற்கனவே உடல்நலக் குறைபாடு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை தேவைப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, அன்வர்தீன் உள்ளிட்ட மூன்று பேர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர். ஆனால், நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. இந்த நிலையில், நேற்று இரவு மதுரை மத்திய சிறையில் இருந்த அன்வர்தீனின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்தார். தற்போது அன்வர்தீனின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது உயிரிழப்புக்கான காரணம் குறித்து மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிறைத்துறை, காவல்துறை சார்ந்த விசாரணைகள் நடைபெற உள்ளன. முதற்கட்டமாக அவருக்கு இருந்த அதிக அழுத்தம் மற்றும் மற்ற உடல்நல பாதிப்பால் உயிரிழப்பு நடைபெற்றாக சந்தேகிக்கப்படும் நிலையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு முழு தகவல் தெரிவரும் என சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான கோவில் நிலத்தை ரூ.2 கோடிக்கு பத்திரப்பதிவு செய்ததாக கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட நபர், விசாரணை முடிந்து சிறைக்கு திரும்பிய சில மணி நேரங்களில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com