திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், அதே பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவரை சக மாணவர்கள் சிலர் பள்ளி வளாகத்திலேயே தாக்கி, அவமானப்படுத்தியதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், மாணவர் ஒருவரை சில மாணவர்கள் பிடித்து இழுத்துச் சென்று, பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறை அருகே வைத்து சரமாரியாக தாக்குவது பதிவாகியுள்ளது.
மேலும், மாணவரின் சட்டையை கழற்றிவிட்டு, அவரை முட்டிபோட வைத்து அவமானப்படுத்துவதுடன், கடுமையான வார்த்தைகளால் திட்டுவதும் வீடியோவில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அந்த மாணவர் தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதாக கூறப்படும் ஒரு வீடியோ தொடர்பாகவே இந்த தாக்குதல் நடைபெற்றதாக தெரிகிறது. அந்த பதிவை நீக்க வேண்டும் எனக் கூறி, மாணவரை சக மாணவர்கள் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. அவர் உடனடியாக அந்த பதிவை நீக்க வேண்டும் என்றும், இல்லையெனில் தாக்குதல் தொடரும் வகையில் மிரட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, மாணவரை சுற்றி நின்ற சக மாணவர்கள் சிலர் அவரை தாக்குவதுடன், முட்டிபோட வைத்து அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. பள்ளி வளாகத்திற்குள் மாணவர் ஒருவர் இவ்வாறு துன்புறுத்தப்பட்ட சம்பவம், தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. குறிப்பாக, மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை வழங்க வேண்டிய பள்ளி வளாகத்திலேயே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவை பார்த்த மாணவர்களின் பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது குறித்தும் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மேலும், மாணவர்களிடையே இதுபோன்ற தாக்குதல் மற்றும் ராகிங் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க பள்ளி நிர்வாகமும், கல்வித்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர். சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, மாணவரை தாக்கியதாக கூறப்படும் சக மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
இதனிடையே, இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது, தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் யார், இன்ஸ்டாகிராம் பதிவை நீக்கச் சொல்லி மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். இன்ஸ்டாகிராம் பதிவை நீக்கச் சொல்லி பள்ளி மாணவரை கழிவறை அருகே வைத்து சட்டையை கழற்றி தாக்கியதாக வெளியாகியுள்ள வீடியோ, பள்ளிப்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்