
சென்னை மாவட்டம், கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஷாந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு ஆணுடன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர் ஷாந்திக்கும் அவரது கணவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்துவந்தனர். அப்போது ஷாந்தி வேறொருவரை இரண்டாவது திருமண செய்து கொண்டு தனது மகளுடன் வேலூரில் தங்கி பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஷாந்தியின் முதல் கணவருக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்ட நிலையில் அவரை பார்த்து கொள்ள ஷாந்தி தனது மகளை அவரது அத்தை வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அப்போது சிறுமி பார்ட் டைமில் வேலை வாங்கி தருமாறு அவரது அத்தையிடம் கேட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அவரது அத்தை துணி எடுத்து தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி ஈ.சி.ஆரில் உள்ள ஒரு வீட்டிற்கு சிறுமியை வலுக்கட்டாயமாக அழைத்து சென்றுள்ளார்.
அங்கு அனைத்திந்திய இந்து மகா சபாவின் தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அதே போல சிறுமியின் அத்தை சிறுமியை மேலும் இரண்டு முறை அந்த வீட்டிற்கு அழைத்து சென்று ஸ்ரீக்கு இரையாக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதில் பயந்த சிறுமி தனது அம்மாவுடன் சென்று வாழ்ந்து வந்த நிலையில் தனக்கு நடந்ததை யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்திருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்னர் சிறுமி அவரது பாட்டியின் துக்க நிகழ்வுக்கு கோடம்பாக்கம் வந்த போது அவரது அத்தை “சொத்துக்காக வந்துள்ளாயா?” என சிறுமியிடம் சண்டையிட்டுள்ளார். மேலும் “உன்னை பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ என்னிடம் இருக்கிறது அதை சமூக ஊடகத்தில் வெளியிடுவேன்” எனக் கூறி சிறுமியை மிரட்டியுள்ளார். இதனால் பயந்த சிறுமி இது தொடர்பாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.
சிறுமி அளித்த தகவலின் பெயரில், தி நகர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறுமியின் அத்தை மற்றும் அனைத்திந்திய இந்து மக்கள் சபாவின் தலைவர் ஸ்ரீகண்டன் என்கிற கோடம்பாக்கம் ஸ்ரீயை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட கோடம்பாக்கம் ஸ்ரீ மீது ஏற்கனவே தொழிலதிபரை கடத்தி நில அபகரிப்பு செய்த வழக்கில் கைது செய்யப்பட்டதும், மேலும் சில போக்சோ வழக்குகள் அவர் மீது இருப்பதும் தெரியவந்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.