"வழிப்பறி கொள்ளை"யனாக மாறிய போலீஸ்...!!

"வழிப்பறி கொள்ளை"யனாக மாறிய போலீஸ்...!!
Published on
Updated on
1 min read

சென்னையில் ஆயுதப்படை காவலர் ஒருவர் வழிப்பறி கொள்ளையனாக மாறி  30 லட்ச ரூபாய் பணத்தை பறித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் அழகுராஜா. இவர் வெளிநாடுகளில் இருந்த ஹவாலா பணத்தை பறிமாற்றம் செய்யும் குருவியாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. நேற்று முந்தினம் அழகுராஜா சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலமாக சென்னை மண்ணடிக்கு வந்துள்ளார். பின்னர் 30 லட்ச ரூபாய் ஹவாலா பணத்துடன் திருவல்லிக்கேணி நோக்கி சென்றுள்ளார். 

அப்போது மன்றோ சிலை அருகே காக்கி சீருடையில் நின்றிருந்த இருவர் போலீஸ் எனக்கூறி அழகுராஜாவை வழிமறித்து சோதனையிட்டுள்ளனர். சோதனையில் அவரிடம் 30லட்ச ரூபாய் பணம் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, பணத்திற்குண்டான ஆவணம் அழகுராஜாவிடம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த அந்த காவலர் தனது இருசக்கர வாகனத்தில் விசாரணைக்காக அழகுராஜாவை அழைத்து சென்றுள்ளார். பின்னர் முத்துசாமி பாலம் செல்லும் வழியில் அழகுராஜாவை இறக்கிவிட்டு 30லட்சம் பணத்துடன் காவலர் தப்பிச்சென்றுள்ளார். 

இதனால் அதிர்ச்சியடைந்த அழகுராஜா, இது குறித்து எஸ்பிளனேடு காவல் நிலையத்திற்கு சென்று நேற்று புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் எஸ்பிளனேடு போலீசார் வழக்குபதிவு செய்து சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.  அதில் பதிவான காட்சிகளை வைத்து 30லட்ச ரூபாய் ஹவாலா பணத்தை பறித்துச் சென்ற இருவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் ஆயுதப்படை காவலர் செந்தில் மற்றும் அவரது நண்பர் டைசன் என்பது தெரியவந்தது. மேலும் செந்தில் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஹவாலா பணத்தை பறித்து சென்றதும் தெரியவந்தது. மேலும் தலைமறைவான காவலர் செந்திலின் நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com