“கழிவறையில் இருந்த 7 மாத சிசுவின் சடலம்” - பராமரிப்பாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. சட்டவிரோத கருக்கலைப்பா?

கழிவுநீருடன் சுமார் 7 மாத வளர்ச்சியடைந்த ஆண் சிசுவின் சடலம் வெளியே வந்துள்ளது...
“கழிவறையில் இருந்த 7 மாத சிசுவின் சடலம்” - பராமரிப்பாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. சட்டவிரோத கருக்கலைப்பா?
Published on: 
Updated on: 
1 min read

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள பொதுக் கழிப்பறையில் சுமார் 7 மாத வளர்ச்சியடைந்த ஆண் சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 11-வது வார்டு, ஜோதி நகர் சி காலனி பகுதியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த பொதுக் கழிப்பிடம் செயல்பட்டு வருகிறது. இந்தக் கழிப்பிட வளாகத்தை சித்ரா என்பவர் பராமரித்து வருகிறார். 

தினமும் காலை 6 மணிக்குத் திறக்கப்படும் இந்தக் கழிப்பறையை அப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று(நவ 01)  கழிப்பறையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கழிவுநீர் அகற்றும் வாகனம் வரவழைக்கப்பட்டு அடைப்பைச் சரி செய்யும் பணி நடைபெற்றது. அப்போது கழிவுநீருடன் சுமார் 7 மாத வளர்ச்சியடைந்த ஆண் சிசுவின் சடலம் வெளியே வந்துள்ளது. 

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கழிப்பறை பராமரிப்பாளர் சித்ரா, உடனடியாக சூளேஸ்வரன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ஜெயலட்சுமிக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஜெயலட்சுமி பொள்ளாச்சி கிழக்குக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கழிவுநீர் கால்வாயில் கிடந்த சிசுவின் சடலத்தை மீட்டு உடனடியாக பிரேத பரிசோதனை செய்ய பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து பொதுக் கழிப்பறையில் சிசுவின் சடலத்தை வீசிச் சென்றது யார்? சட்டவிரோதமாகக் கருக்கலைப்பு செய்யப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து பொள்ளாச்சி கிழக்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிசுவின் சடலம் அங்கு எப்படிக் கொண்டுவரப்பட்டது என்பதைக் கண்டறியவும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் பயன்படுத்தும் கழிப்பறையில் கழிவுநீர் அடைப்பை நீக்கும் பணியின்போது சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.