தர்மபுரி அரசு மருத்துவமனையில் செவிலியர்களுக்கு உதவியாளராக வேலை பார்த்து வருபவர் அதியமான். இவரது முக்கிய வேலையே சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் மெல்ல பேச்சுக் கொடுத்து அவர்களை தனியார் மருத்துவமனைக்கு அனுமதித்து கணிசமாக கமிஷனை பெற்றுக் கொள்வதுதான்.
இது தவிர மீத நேரங்களில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் நோயாளிகளிடம் நயந்து பேசம் அதியமான், காதல் வலையில் வீழ்த்தி பாலியல் இச்சைக்கு அடிமையாக்குவதும், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணத்தைக் கறப்பதுமாய் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் பென்னாகரம் அருகே ஆலமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சமதர்மன். ராணுவவீரரான இவரது மனைவி அமலா, சில நாட்களாக மாயமானதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பாப்பரப்பட்டி காவல்நிலையத்தில் சமதர்மன் அளித்த புகாரின் அடிப்படையில், விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் மடதள்ளி கிராமத்தைச் சேர்ந்த அதியமானை அழைத்து விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.
தர்மபுரி அரசு மருத்துவமனையில் வேலை பார்த்து வரும் அதியமான், சமதர்மனின் மனைவி அமலாவுடன் நெருங்கிப் பழகினார். அரசு மருத்துவமனையில் உதவியாளர் பணி பெற்றுத் தருவதாக கூறியவர், 6 லட்ச ரூபாய் பெற்றுக் கொண்டு போலி பணியானை வழங்கினார்.
இதே போல பென்னாகரத்தைச் சேர்ந்த கைம்பெண், காமாட்சி என்பவரிடம் 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டவர், அவருக்கு ஓசூர் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக போலி பணியாணை வழங்கினார்.
மேலும் ஏராளமானோரை ஏமாற்றிய அதியமான், இதுவரை 25 லட்ச ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளார். அதோடு வலையில் விழும் பெண்களை தன் இச்சைக்கும் பயன்படுத்தியிருக்கிறார்.
ஏற்கெனவே இரண்டு மூன்று திருமணங்கள் செய்து, அதை மறைத்தவர், சமதர்மனின் மனைவி அமலாவை காதலித்து கடத்திச் சென்றார். இவ்வாறு பல வருடங்களாக ஏமாற்றி வந்த தில்லாலங்கடி பேர்வழியை கைது செய்த பாப்பரப்பட்டி போலீசார், அவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
அரசு மருத்துவமனையில் செவிலியர்களுக்கு உதவியாளராக இருந்து கொண்டு, அரசு வேலை வாங்கித் தருவதாக கலெக்டர் போல பீலா விட்ட இவரது செயல் தர்மபுரி மக்களை தடுமாறச் செய்துள்ளது.