பெண் போல நடித்து, ஆண்களிடமிருந்து பணம் பறித்து, அவர்களின் அந்தரங்கப் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பேசி வாங்கி, பின்னர் இணையத்தில் பரப்பிவிடுவதாக மிரட்டிய 23 வயது இளைஞர் ஒருவரை சைதாபாத் போலீசார் கைது செய்துள்ளனர்.
குக்கட்பள்ளியைச் சேர்ந்த கொண்டபட்டுலா பவன் குமார் என்பவர், சந்தனா என்ற போலி பெயரில் சமூக வலைத்தளத்தில் இயங்கிவந்துள்ளார். மேலும், தனது சமூக வலைதளபக்கத்தில் கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு பெண்ணின் புகைப்படங்களைப் பயன்படுத்தி போலி ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை உருவாக்கியுள்ளார்.
பின்னர், அவர் சில ஆண்களுக்கு பின்தொடர் கோரிக்கைகளை (follow request) அனுப்பி, உரையாடல்களைத் தொடங்கியுள்ளார். பின்னர், படிப்படியாக அவர்களை பாலியல் ரீதியான பேச்சுக்கு ஈர்த்து, அந்த ஆண்களிடமிருந்து நைசாக பேசி நிர்வாணப் புகைப்படங்களைப் பெற்றுக்கொண்டுள்ளார். அவர்களது புகைப்படங்களையும் வீடியோக்களையும் சேகரித்த பிறகு, பவன் பாதிக்கப்பட்டவர்களிடம் தன்னை அந்தப் பெண்ணின் சகோதரன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, அவர்களை மிரட்டியுள்ளார்.
தனது "சகோதரியை" வைத்து அவர்கள் மீது புகார் அளிக்கப் போவதாக மிரட்டியுள்ளார். அதன் பின்னர், இது பற்றி வெளியே சொல்லாமல் இருக்க அவர்களிடமிருந்து தொடர்ந்து பணம் பறித்து வந்துள்ளார்.
பவன் 13 போலி இன்ஸ்டாகிராம் கணக்குகளையும் 14 ஃபேஸ்புக் கணக்குகளையும் இயக்கி வந்துள்ளார் என்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். 1,000-க்கும் மேற்பட்டோர் அந்தக் கணக்குப் பக்கங்களில் உரையாடியதோடு, பாதிக்கப்பட்ட 82 பேர் நிர்வாணப் புகைப்படங்களையும் காணொளிகளையும் பகிர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காலப்போக்கில், அவர் கிட்டத்தட்ட 38.08 லட்சம் ரூபாயை அவரது வலையில் விழுந்து ஆண்களிடமிருந்து பறித்ததாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் மருத்துவர்கள், தொழிலதிபர்கள், தனியார் ஊழியர்கள், விநியோகப் பணியாளர்கள் மற்றும் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த தற்காலிகப் பணியாளர்கள் ஆகியோர் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், குற்றம் சட்டப்பட்டவரின் நண்பர்களில் ஒருவர் கூட இவரது வலையில் சிக்கவைக்கப்பட்டு, 4 லட்சம் ரூபாய் செலுத்த நிர்பந்திக்கப்பட்டுள்ளார். அதன் பின்னரே இந்த வழக்கு வெளிச்சத்திற்கு வந்த்துள்ளது.
பவன் குமார் மற்ற ஆண்களிடமிருந்து பெறப்பட்ட அந்தரங்க வீடியோக்களை அவரிடமிருந்த மற்ற பல கைபேசிகளிலும் சமூக ஊடகக் கணக்குகளிலும் சேமித்து வந்துள்ளார். காவல்துறையினர் பவன் குமாரிடமிருந்து மூன்று கைபேசிகள், ஒரு ஹெச்பி மடிக்கணினி மற்றும் ஒரு 16 ஜிபி பென் டிரைவ் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் அவர், முதலீட்டு வருமானம் கிடைக்கும் என்ற பொய்யான வாக்குறுதி கொடுத்ததன் பேரில் ஒரு மென்பொருள் நிறுவன ஊழியரை சுமார் 7 லட்சம் ரூபாய் அளவுக்கு ஏமாற்றப்பட்டிருந்ததாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது, பவன் குமார் மீது பாரதிய நியாய சம்ஹிதாவின் 308(7) மற்றும் 351(2) பிரிவுகள் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66C, 66D, 66E மற்றும் 67A பிரிவுகளின் கீழ், சைதாபாத் காவல் நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.