

சென்னை சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணகி நகர் பகுதியில் அண்மையில் பிரபலமான கபடி வீரங்கனை கார்த்திகாவின் கபடி பயிற்சியாளர் ராஜு மீது சக கபடி வீராங்கனை ஒருவர் பாலியல் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கண்ணகி நகர் கபடி பயிற்சியாளர் ராஜு சுமார் 10 வருடங்களாக அப்பகுதி சிறுமிகளுக்கு கபடி பயிற்சி அளித்து வந்துள்ளார். கடந்த 2025ஆம் ஆண்டு பஹ்ரைனில் நடந்த ஜூனியர் கபடி போட்டியில் கண்ணகி நகரை சேர்ந்த வீராங்கனை வெற்றி பெற்று தங்கம் வென்ற போது நாடு முழுவதும் அறிமுகமானார், அவரின் கபடி பயிற்சியாளர் ராஜு. தங்க பதக்கம் வென்ற நிலையில் வீராங்கனையை பாராட்டி பணம் மற்றும் பரிசு பொருட்களை வழங்கிய திரை பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் பயிற்சியாளர் ராஜுவையும் கௌரவிக்கும் வகையில் ஊக்க தொகை மற்றும் பரிசு பொருட்களை வழங்கினார்கள்.
இப்படி நாடு முழுவதும் பரவலாக பேசப்பட்ட கண்ணகி நகர் கபடி அணி பயிற்சியாளர் ராஜு தற்போது, பாலியல் புகாரில் சிக்கியுள்ளார். அவரிடம் பயிற்சி பெற்ற கபடி வீராங்கனையிடம் வலுக்கட்டாயமாக பலமுறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் கண்ணகி நகர் காவல் நிலையத்தில் உள்ள செம்மஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்ற போலீசார் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்களை கேட்டு போலீசாரே அதிர்ச்சியடைந்துள்ளனர்.
17 வயதான பாதிக்கப்பட்ட இளம்பெண் தாய், தந்தை இல்லாமல் அவரது பாட்டி ஆதரவுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கபடி பயிற்சியாளர் ராஜு பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் வீட்டிற்கு சென்று கடந்த 9ம் தேதி முதல் இதுவரை இந்த மாதத்தில் மட்டுமே மூன்று முறை சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், “என்னுடன் அட்ஜெஸ்மென்ட் செய்தால் மட்டுமே மாவட்ட, மாநில அளவில் நடைபெற உள்ள கபடி போட்டிகளில் விளையாட விடுவேன் என்று மிரட்டி பயிற்சியாளர் ராஜுவின் பாலியல் இச்சைக்கு இணங்க வைத்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் வேதனையுடன் கூறியுள்ளார்.
கபடி பயிற்சியாளர் ராஜு அத்துமீறலுக்கு அட்ஜெஸ்ட்மென்ட் செய்யும் சிறுமிகளை மட்டுமே கபடி அணியில் வைத்துக் கொள்வதாகவும், அட்ஜெஸ்ட்மென்ட் செய்யாத சிறுமிகளை பயிற்சி அளிக்கும்போது சக வீராங்கனைகள் முன்பு திட்டுவது, அடிப்பது போன்ற செயலில் ஈடுபட்டு “உனக்கு எல்லாம் கபடி வராது நீ எல்லாம் எதற்கு கபடி ஆட வருகிறாய்” என்று கடுமையான வார்த்தைகளால் திட்டி கண்ணகி நகர் கபடி அணியில் விளையாட விட மாட்டார் என்ற தகவலும் வெளியாகி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட கபடி வீராங்கனை பயிற்சியாளர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக செம்மஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதை அறிந்த கபடி பயிற்சியாளர் ராஜு தற்போது தலைமறைவாக உள்ளார். ஏழை எளிய மக்கள் அதிகம் வசிக்கும் கண்ணகி நகர் பகுதி ஆரம்பத்தில் குற்றச்சம்பவங்கள் அதிகம் அரங்கேறும் பகுதியாக பார்க்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது கல்வியிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்கி வரும் கண்ணகி நகர் பெயர் நாடு முழுவதும் பரவி பெருமை சேர்த்து வரும் நிலையில் கபடி பயிற்சியாளர் ராஜுவின் பாலியல் அத்துமீறல் லீலைகள் வெளியாகி கண்ணகி நகர் பகுதி மக்களிடையே, நாடு முழுவதும் உள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் பொதுமக்களிடையே இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட கபடி வீராங்கனை நேற்று காலை 10 மணிக்கு செம்மஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்த நிலையில் ஆய்வாளர் வருவார் என்று நண்பகல் 2:30 மணி வரை காவல் நிலையத்தில் அமர வைத்து பாதிக்கப்பட்ட சிறுமியை அலைக்கழித்தது மட்டும் இல்லாமல் 24 மணி நேரம் ஆகியும் வழக்கு பதிவு செய்யாமல் மிகவும் அலட்சியமாக செயல்பட்டு வருவதாகவும் பாதிக்கப்பட்ட கபடி வீராங்கனையான சிறுமி வேதனையுடன் தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.