“காதலியின் வீட்டில் சடலமாக கிடந்த காதலன்” - வாட்ஸ்அப் மூலம் புகைப்படம் அனுப்பிய பெண்.. விலகுமா மர்மம்?

உடலை செல்போனில் புகைப்படம் எடுத்து முருகனின் உறவினர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது..
Murugan Mysterious Death Case
Murugan Mysterious Death Case
Published on
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசு என்பவரது 27 வயதுடைய மகன் முருகன். இவருக்கு வைத்தியநாதன் வயல் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரது 16 வயது மகள் யமுனா என்பவருடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. பின்னர் இருவரும் அடிக்கடி வெளியில் சுற்றி வந்த நிலையில் முருகன் காதலியை சந்திக்க அவ்வப்போது அவரது வீட்டிற்கும் சென்று வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், முருகன் தனது காதலி யமுனாவை பார்ப்பதற்காக நேற்று அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சிறிது நேரத்திற்குப் பிறகு, முருகன் யமுனாவின் வீட்டிற்குள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்ததாக கூறப்படுகிறது. முருகன் உயிரிழந்து கிடந்ததை பார்த்த யமுனா, அவரது உடலை செல்போனில் புகைப்படம் எடுத்ததாகவும், பின்னர் அந்த புகைப்படத்தை முருகனின் உறவினர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். முருகனின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், முருகன் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக வீட்டில் இருந்த அவரது காதலி யமுனா, அவரது தாயார் பெரியநாயகி மற்றும் யமுனாவின் தாய்மாமன் செல்வம் ஆகிய மூவரையும் அறந்தாங்கி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முருகன் எப்படி உயிரிழந்தார், அவரது மரணத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே உயிரிழப்புக்கான காரணம் குறித்து தெளிவான தகவல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காதலியை பார்க்க சென்ற 27 வயது இளைஞர், அவரது வீட்டிலேயே மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து காதலியின் வீட்டின் முன்பு உயிரிழந்தவரின் உறவினர்கள் கூடியதால் அறந்தாங்கி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com