

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் 15 வயது மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக, பள்ளியின் உடற்கல்வி ஆசிரியரான 52 வயதுடைய ஆமோஸ் தேவசகாயம் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், தற்போது புதுக்கோட்டை கணேஷ் நகர் முதல் வீதியில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த (பிப் 22) -ஆம் தேதி புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் பங்கேற்க, பாதிக்கப்பட்ட மாணவி உள்ளிட்ட சில மாணவிகளை அழைத்துக்கொண்டு உடற்கல்வி ஆசிரியர் ஆமோஸ் தேவசகாயம் சென்றுள்ளார்.
போட்டிகள் முடிந்த மற்ற மாணவிகள் பேருந்தில் சென்ற நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது தோழியை பள்ளிக்கு அழைத்து வருவதற்காக ஆமோஸ் தேவசகாயம் தனது காரில் ஏற்றிச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது பாதிக்கப்பட்ட மாணவியை காரின் முன்பக்க இருக்கையில் அமர வைத்த ஆசிரியர், பயணத்தின் போது அவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என மாணவியை மிரட்டி பின்னர் இருவரையும் பள்ளி வளாகத்தில் இறக்கி விட்டிருக்கிறார்.
இந்த சம்பவத்தை கவனித்த காரின் பின் பக்க இருக்கையில் அமர்ந்திருந்த பாதிக்கப்பட்ட மாணவியின் தோழி அச்சமடைந்திருக்கிறார். பின்னர் சில நாட்களுக்கு பிறகு இதுகுறித்து மாணவியின் தோழியை காரின் பின்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த மாணவி குழந்தை பாதுகாப்பு அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள் மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மாணவி கூறிய தகவல்களின் அடிப்படையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராமபிரியா, புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மாணவியிடம் ஆசிரியர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரியவந்ததைத் தொடர்ந்து, உடற்கல்வி ஆசிரியர் ஆமோஸ் தேவசகாயத்தை போலீசார் கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட ஆசிரியரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளி மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள இந்த சம்பவம், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் கல்வி வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.