புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரது மகள் 25 வயதுடைய ரேணுகா. இவருக்கு திருமணமாய் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக அவருக்கும் அவரது கணவர் என சொல்லப்படும் கமல் என்பவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. ரேணுகாவின் நடத்தை சரியில்லாததால் கமல் அவரை விட்டு விலகி சென்றுள்ளார். இதனால் தனியாக குழந்தைகளுடன் வசித்து வந்த ரேணுகா பலமுறை கமலுடன் சேர்ந்து வாழ முயற்சித்து அவர் ரேணுகாவை ஏற்றுக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று (செப் 16) காலை தனது சகோதரி ஸ்ரீதேவிக்கு ரேணுகா வாட்ஸ்அப் மூலம் வாய்ஸ் மெசேஜ் ஒன்றை அனுப்பியதாக கூறப்படுகிறது. அதில், தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், தனது குழந்தைகளை பார்த்துக் கொள்ளுமாறு தெரிவித்திருக்கிறார். ரேணுகாவின் வாய்ஸ் மெசேஜைக் கேட்ட ஸ்ரீதேவி அதிர்ச்சியடைந்த நிலையில், திருச்சி மணிகண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாகமங்கலம் அருகே உள்ள இந்திரா குடியிருப்பில் வசிக்கும் சுசீலா என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும், உடனே ரேணுகாவை சென்று பார்க்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையடுத்து அவர் கதவு புட்டி இருப்பதாக தெரிவித்த நிலையில் உடனடியாக ஸ்ரீதேவி சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது, வீட்டிற்குள் ரேணுகா சேலையால் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை கீழே இறக்கி பார்த்தபோது, ரேணுகா ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ரேணுகாவின் தந்தை ராஜ்குமார் மணிகண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரேணுகாவின் உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் ரேணுகா அவர் தற்கொலை செய்துகொள்வதாக வீடியோ ஒன்றை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது வைரலாகி வருகிறது. அதில் “ நான் தூக்கு போட்டு சாகப்போறேன் தேவி மன்னிச்சிடு நீ எனக்கு இன்னொரு அம்மா மாதிரி பாப்பாவை பாத்துக்கோ.. கமல் வந்த பிள்ளையை ஒப்படைச்சிடு.. கமல் எனக்கு உன்னை புடிக்கும் நீயும் தப்பு பண்ண.. நானும் தப்பு பண்ணேன் திரும்பி வந்து நீ எதுக்குவேன் நினைச்சேன்.. ஆன நீ விட்டுட்டு போய்ட்ட உன் குழந்தைய பத்திரமா பாத்துக்கோ நீ பத்துக்குவேன் தான் விட்டுட்டு போறேன்.. என்னை இன்ஸ்டாவில் சப்போர்ட் பண்ண எல்லாருக்கும் தேங்ஸ்.. இது தான் என் கடைசி வீடியோ..” என் கூறியுள்ளார்.
தொடர்ந்து போலீசார் கமல் குறித்த விவரங்களையும் விசாரித்து வருகின்றனர். மேலும் குடும்பப் பிரச்சினை தான் தற்கொலைக்கு காரணமாக அவர் தான் இந்த முடிவை எடுத்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் வீடியோ போட்டுவிட்டு பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்