இப்படியும் ஒரு கேவலமான தாய் இந்திய மண்ணில்.. அந்த குழந்தை எப்படி துடித்திருக்கும்!

சுமார் 19 நாட்களே ஆன பச்சிளங் குழந்தை ஒன்று, பில்வாராவின் மண்டல்கர் பகுதிக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் கைவிடப்பட்டுக் கிடந்துள்ளது.
bhilwara news
bhilwara news
Published on
Updated on
1 min read

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் நிகழ்ந்த அரங்கேறிய ஓர் சம்பவம், மனிதநேயத்தின் மீதான கேள்வியை எழுப்பியுள்ளது. உதடுகளில் பசை ஒட்டப்பட்ட நிலையில், வாய்க்குள் கல் திணிக்கப்பட்டு காட்டில் வீசப்பட்டிருந்த பச்சிளங் குழந்தை, மீட்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, அதன் தாயும் அப்பெண்ணின் தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் 19 நாட்களே ஆன பச்சிளங் குழந்தை ஒன்று, பில்வாராவின் மண்டல்கர் பகுதிக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் கைவிடப்பட்டுக் கிடந்துள்ளது.

அந்த வழியாக கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த ஒரு நபர் குழந்தை முனகும் சப்தத்தை கேட்டு, அளித்த தகவலின் பேரில் காவல்துறையினர் விரைந்த வந்த போது, குழந்தையின் நிலை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். குழந்தையின் உதடுகள் ‘க்ளூ’ எனப்படும் பசையால் இறுக ஒட்டப்பட்டிருந்தன. மேலும், குழந்தை சத்தம் போட்டு அழக்கூடாது என்பதற்காக, அதன் வாய்க்குள் ஒரு கல்லைத் திணித்து வைத்துள்ளனர்.

குழந்தையின் உயிரைப் பறிக்க எடுத்த இந்தக் கொடூர முயற்சிக்கு மத்தியிலும், அதன் மெல்லிய அழுகுரல் சத்தமே கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தவருக்கு கேட்டிருக்கிறது. இப்போது குழந்தை மீட்கப்பட்டு, பில்வாராவில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (NICU) அனுமதிக்கப்பட்டுள்ளது.

குழந்தையைக் கைவிட்டவர் குறித்துக் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டதில், அந்த குழந்தையின் தாய், வேறு ஒருவருடன் வைத்திருந்த உறவின் மூலம் இக்குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். பிறகு, ஊருக்கு பயந்து, இக்குற்றத்தை அரங்கேற்ற, தாயும் அவரது தந்தையும் திட்டமிட்டுள்ளனர். பிரசவத்தின் போது யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக, அவர்கள் இருவரும் போலியான அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி, அருகிலுள்ள பண்டி பகுதியில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து அங்கு பிரசவம் பார்த்துள்ளனர்.

மேலும், அவர்கள் குழந்தையை யாரோ ஒருவருக்கு விற்பதற்கும் முயற்சி செய்துள்ளனர். ஆனால், அந்த முயற்சி தோல்வியடைந்ததால், வேறு வழியின்றி குழந்தையைக் காட்டில் வீச முடிவெடுத்துள்ளனர்.

பில்வாரா காவல்துறை கண்காணிப்பாளர் தர்மேந்திர சிங் யாதவ் இதுகுறித்து பேசும்போது, "உளவுத் தகவலின் பேரில் தாய் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். குழந்தை வீசப்பட்டதற்கான காரணத்தை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். சட்ட ரீதியாக உறுதி செய்ய, டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ளப்படும்," என்று தெரிவித்தார்.

மீட்கப்பட்ட குழந்தையின் நிலை இன்னும் கவலைக்கிடமாகவே இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குழந்தை தற்போது ஆக்ஸிஜன் உதவியுடன் சுவாசித்துக் கொண்டிருக்கிறது.

"குழந்தை வெப்பமான கற்களின் மீது கிடந்ததால் கடும் காயம் அடைந்துள்ளது. மேலும், சுவாசச் சிக்கல்களும் உள்ளது. குழந்தையின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்," என்று பில்வாரா மருத்துவக் கல்லூரியின் பொறுப்பாளர் டாக்டர் இந்திரா சிங் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com