“மொட்டை அடித்து கூலி தொழிலாளி கொலை” - கம்பத்தில் கட்டி சித்ரவதை செய்த முதலாளி.. பழங்குடியின வாலிபருக்கு நடந்த அநியாயம்!

எல்லையம்மன் பேட்டை கிராமத்தில் உள்ள கால்வாயில் மணிமாறன் கொலை செய்யப்பட்டு மொட்டை அடிக்கப்பட்டு...
“மொட்டை அடித்து கூலி தொழிலாளி கொலை” - கம்பத்தில் கட்டி சித்ரவதை செய்த முதலாளி.. பழங்குடியின வாலிபருக்கு நடந்த அநியாயம்!
Published on
Updated on
2 min read

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த காட்டுநாயக்கன் நகர் பகுதியை சேர்ந்த பழங்குடியின கூலி தொழிலாளி 26 வயதுடைய மணிமாறன். இவர் சாலை ஓரங்களில் உள்ள பழைய பிளாஸ்டிக், இரும்பு , அட்டைபொருட்களை சேகரித்து அவற்றை எடைக்கு போட்டு விற்று அதில் வரும் பணத்தை வைத்து பிழைப்பு நடத்தி வந்தார். இந்த நிலையில்,கோனிமேடு பகுதியில் அமைந்துள்ள தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் நேற்று பழைய பொருட்களை சேகரிக்கும் கூலித் தொழிலாளி மணிமாறன் திருடுவதற்கு சென்றதாக கூறப்படுகிறது.

இதனைக் கண்ட தொழிற்சாலை ஊழியர்கள் மணிமாறனை சிறைபிடித்து கைகளால் தாக்கியும், கம்பால் அடித்தும் , அங்கிருந்த கம்பத்தில் கட்டி வைத்து இரும்புராடால் பயங்கரமாக தாக்கியுள்ளார்கள். மணிமாறன் நள்ளிரவு வரை வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரின் உறவினர்கள் பல இடங்களில் தேடி வந்ததில் அவர்களுக்கு கிடைத்த தகவலின் படி தொழிற்சாலையில் திருட வந்ததாக மணிமாறனை அங்குகட்டி வைத்துள்ளது தெரியவந்தால், தொழிற்சாலைக்கு சென்று விவரம் கேட்டுள்ளனர்.

அதற்கு தொழிற்சாலையின் சார்பில் பேசிய ஊழியர்கள் சிலர், இந்த கம்பெனியில் 6 லட்ச ரூபாய் வரையிலான பொருட்கள் ஏற்கனவே திருடு போய் உள்ளதாகவும் அந்த பணத்தை கொடுத்தால் விட்டு விடுவதாகவும் பொதுமக்களிடம் கூறியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் என்ன செய்வது என தெரியாமல் தவித்து வந்த நிலையில் எல்லையம்மன் பேட்டை கிராமத்தில் உள்ள கால்வாயில் மணிமாறன் கொலை செய்யப்பட்டு, அவரது தலை மொட்டை அடிக்கப்பட்டு உடலில் காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

Admin

தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற செங்குன்றம் போலீசார் மணிமாறன் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் ஆவடி காவல் மாவட்ட செங்குன்றம் துணை ஆணையாளர் பாலாஜி, செங்குன்றம் சரக உதவி ஆணையாளர் ராஜா ராபர்ட் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து துரித விசாரணை மேற்கொண்டனர்.

கூலி தொழிலாளி மணிமாறன் அடித்துக் கொலை செய்யப்பட்ட செய்தி காட்டு தீ போல் பரவியதால் அவரது உறவினர்கள் கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி தொழிற்சாலை முன்பு கூடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது . இதனையடுத்து பாதுகாப்பிற்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Admin

பின்னர் அங்கு மோப்பநாய் ‌மற்றும் கைரேகை தடையல் வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து செங்குன்றம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்கு பதிவு செய்து இச் சம்பவத்திற்கு காரணமான, தொழிற்சாலையின் உரிமையாளரின் மகன் உட்பட 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தொழிற்சாலையின் உரிமையாளர் தலைமறைவான காரணத்தினால் அவரை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com