ரூ.25 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் மீட்பு... அதிரடி காட்டிய அதிகாரிகள்...

தஞ்சாவூரில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட 25 கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகளை அதிகாரிகள் கடத்தல் ஆசாமிகளிடம் இருந்து பறிமுதல் செய்தனர். சிலை கடத்தல் ஆசாமிகளை போலீசார் கையும் களவுமாக பிடித்தது எப்படி? பார்க்கலாம் இந்த தொகுப்பில்
ரூ.25 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் மீட்பு... அதிரடி காட்டிய அதிகாரிகள்...

தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு ஐம்பொன் சிலைகள் கடத்தப்படுவதாய் ரகசிய தகவல்கள் வெளியாகின. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் 13 ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதனிடையே சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக இருந்த பொன் மாணிக்கவேல் தஞ்சாவூருக்கு சென்று அங்கு ஐம்பொன் சிலை ஒன்று கடத்தப்பட்டிருப்பதாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்திருந்தார்.

அப்போது பேசியவர், தொன்மை வாய்ந்த சிலைகள் கடத்தப்பட்டு நியூயார்க் நகரத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், உடனடியாக அந்த சிலைகளை மீட்குமாறும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனிடையே ஜூலை 8-ம் தேதியன்று தஞ்சாவூர் - திருச்சி நெடுஞ்சாலையில் பெரியார் சமத்துவபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை சோதித்து பார்த்ததில் பழங்கால ஆறு ஐம்பொன் சிலைகள் இருப்பது தெரியவந்தது. திரிபுரதங்கர், வீணாதாரா தட்சிணமூர்த்தி, ரிஷபதேவர் இவற்றுடன் தேவியின் 3 சிலைகள் என மொத்தம் 6 சிலைகள் கைப்பற்றப்பட்டது.

இதையடுத்து சிலை கடத்தலில் கைதானவர்களை விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் கொற்கை கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் வீட்டை புதுப்பிக்க பள்ளம் தோண்டினார்.

அப்போது தரைக்கு 10 அடி ஆழத்தில் 6 ஐம்பொன் சிலைகள் கிடைத்தது. இதைடுத்து லட்சுமணன், அந்த சிலைகளை ராஜேஷ் கண்ணா என்பவரின் மூலமாக வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டார்.

அதன்படி தஞ்சாவூரில் இருந்து சென்னை கொண்டு வரப்பட்டு அங்கிருந்து அமெரிக்காவுக்கு கடத்துவதற்கு திட்டமிட்டனர். ஆனால் உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய போலீசார் ஐம்பொன் சிலைகளை பறிமுதல் செய்தனர்.

இதில் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளின் மதிப்பு 22 கோடியில் இருந்து 26 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட லட்சுமணன், ராஜேஷ் கண்ணா, திருமுருகன் ஆகிய மூவரையும் கைது செய்த போலீசார் கும்பகோணம் நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தஞ்சாவூரில் கடத்தப்பட்ட சிலை தற்போது நியூயார்க்கில் இருப்பதாக பொன் மாணிக்கவேல் தெரிவித்திருந்த நிலையில், கடத்தப்பட்ட சிலையை தஞ்சாவூரிலேயே அதிகாரிகள் மீட்டது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com