வைபை ஏ.டி.எம் கார்ட்டை வைத்து  பல ஆயிரம் ரூபாய் கொள்ளை..இந்த இடத்தில் மறந்து வைத்தால் அவ்வளவு தான்.! 

வைபை ஏ.டி.எம் கார்ட்டை வைத்து  பல ஆயிரம் ரூபாய் கொள்ளை..இந்த இடத்தில் மறந்து வைத்தால் அவ்வளவு தான்.! 

ஏடிஎம் மையங்களில் தவறவிடும் வைபை கார்டுகளை மட்டுமே குறிவைத்து திருடி அதன் மூலம் பல ஆயிரம் ரூபாயை நூதன முறையில் திருடும் கொள்ளையனை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை கோயம்பேடு சின்மயா நகரை சேர்ந்த மனோகரா(32) என்பவர் கோயம்பேடு காவல் நிலையத்தில் கடந்த 1ஆம் தேதி புகார் ஒன்றை அளித்தார்.அதில் கடந்த 28ஆம் தேதி சின்மயா நகரில் உள்ள ஐசிஐசிஐ  ஏடி.எம் மையத்தில் 1500  ரூபாய் பணத்தை எடுத்துவிட்டு தனது வைபை ஏடி.எம் கார்டை மறந்துவிட்டு சென்றதாகவும்,பின்பு கடந்த 28ஆம் தேதி தான் தவறவிட்ட கார்டிலிருந்து 25,000 ரூபாய் பணம் எடுக்கப்பட்டதாக மெசேஜ் வந்தது.இதனை கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதாக மனோகரா குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து கோயம்பேடு சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து  அந்த ஏடி.எம் கார்டிலிருந்து பணம் எடுத்த இடத்தினை டிராக் செய்ததில் கீழ்ப்பாக்கத்தில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் ஸ்வைப் செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் விரைந்து அந்த பெட்ரோல் பங்கிற்கு சென்று விசாரித்த போது ஒரு நபர் அடிக்கடி வந்து தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி கெஞ்சி வைபை கார்டு மூலம் 5ஆயிரம் ரூபாயாக பல முறை ஸ்வைப் செய்த போது சந்தேகத்திற்கிடமாக இருந்ததினால் அந்த நபரை புகைப்படம் எடுத்துவைத்ததாக அங்கு பணிப்புரிந்த ஊழியர்கள் காண்பித்தனர்.
அந்த புகைப்படத்தை வைத்தும்,சிசிடிவியில் பதிவான முகத்தையும் வைத்து போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் அடையாளங்களை வைத்து கரூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டனை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

மணிகண்டன் புரசைவாக்கம் துர்கா மேன்சனில் தங்கி சௌகார்பேட்டையில் உள்ள ஜுவல்லரி கடைகளுக்கு பிரோக்கராக பணிபுரிந்து வந்துள்ளார்.மேலும் ஏடி.எம் மையங்களில் பணத்தை எடுக்க வரும் பொதுமக்களில் சிலர் ஏடி.எம் கார்டை மறந்து தவறவிட்டு செல்வது வழக்கம்.அதன் பின்னர் வரக்கூடிய நபர் அந்த ஏடி.எம் கார்டை ஓரமாக வைத்து செல்வார்.

இந்த ஏடி.எம் கார்டுகளை மட்டுமே மணிகண்டன் குறிவைத்து திருடி செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.குறிப்பாக அதிலும் வைபை ஏடி.எம் கார்டை மட்டுமே  திருடி சென்று பெட்ரோல் பங்கில் அவசர தேவைக்காக பணம் வேண்டும் என கெஞ்சுவது போல் நடித்து பணத்தை பெற்று செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.மேலும் வைபை ஏடி.எம் கார்டு என்பதால் சம்மந்தப்பட்ட நபருக்கு ஓ.டி.பி செல்லாமல் வைபை கார்டை காட்டி மட்டுமே எளிதாக பணத்தை கொள்ளையடிக்கலாம் என மணிகண்டன் தெரிவித்தார்.

இதே போல் சென்னையில் பல இடங்களில் வைபை ஏடி.எம் கார்டை திருடி பல பெட்ரோல் பங்கில் மணிகண்டன் திருடியது விசாரணையில் தெரியவந்தது.மணிகண்டனிடம் இருந்து 6 வைபை ஏடி.எம் கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.இதே போல் எங்கெல்லாம் மணிகண்டன் பணத்தை திருடியுள்ளார் என்பது குறித்த விசாரணையை போலீசார் நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com