கட்சி பிரமுகரை முடிக்க திட்டம்: பிரபல ரவுடி, துப்பாக்கி முனையில் கைது!!

கட்சி பிரமுகரை முடிக்க திட்டம்:  பிரபல ரவுடி, துப்பாக்கி முனையில் கைது!!
Published on
Updated on
1 min read

ஸ்ரீபெரும்புதூர் அருகே அரசியல் கட்சி பிரமுகரை கொலை செய்ய திட்டம் தீட்டிய பிரபல ரவுடி உள்பட 5 பேரை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிளாய் பகுதியைச் சேர்ந்தவன் பிரபல ரவுடி விஷ்வா (35). இவர் மீது ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. 

அண்மையில் கஞ்சா விற்பனை வழக்கில் கைதான விஷ்வா விழுப்புரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி அன்று பெயிலில் வெளிவந்த விஷ்வா மதுரையைச் சேர்ந்த ரவுடிகளுடன் கூட்டு சேர்ந்து அரசியல் கட்சி முக்கிய பிரமுகர் ஒருவரை கொலை செய்ய திட்டம் தீட்டுவதாக போலீசாரக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. 

அதன் பேரில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி அப்பளம் ராஜா (39) என்பவர் காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்படப்பை பகுதியில் கூட்டாளிகளுடன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தெரியவந்தது. 

இதனையடுத்து அங்கு விரைந்த எஸ்.பி. தலைமையிலான தனிப்படை போலீசார் அப்பளம் ராஜா உள்பட தியாகராஜன் (38), சுரேஷ்குமார் (37), தூத்துக்குடியைச் சேர்ந்த சிவகுமார் (40), படப்பை பகுதியைச் சேர்ந்த மைனர் செல்வம் (39) உள்ளிட்ட 5 பேரை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

பின்னர் 5 பேரையும் ஒரகடம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். போலீஸ் விசாரணையில் ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தனியார் ஆலையில் ஸ்கிராப் எனப்படும் இரும்புக் கழிவுகளை ஒப்பந்தம் எடுக்க வந்ததாக தெரிவித்துள்ளனர். 

இதனிடையே வந்த பிரபல ரவுடி விஷ்வாவும், அப்பளம் ராஜாவும் கூட்டாக சேர்ந்து ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஏற்கனவே கொலை சம்பவங்களை அரங்கேற்றியுள்ளனர். 

அதேபோன்று தற்போது அரசியல் கட்சி முக்கிய பிரமுகர் ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டு இருந்தது போலீசாருக்கு தெரிய வந்தது.

ஸ்கிராப் எடுப்பதில் தொழில் போட்டி ஏற்பட்டு ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தொடர்ந்து கொலைகள் நடைபெற்று வரும் நிலையில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த ஐந்து பேர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் பெயிலில் வெளிவந்துள்ள விஷ்வா மீதும் கைது நடவடிக்கை எடுக்க போலீசார் தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com