சேலத்தில் ஆன்லைன் டிரேடிங் தொழிலில் முதலீடு செய்த ரூ.6 லட்சத்தைத் திருப்பிக் கேட்டு வந்த இருவர், பணத்தைத் தராததால் நண்பர் மற்றும் அவரது குடும்பத்தினரைக் காரில் கடத்திச் சென்று 2 நாட்களாக வீட்டில் அடைத்து வைத்து சித்திரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக இருவரையும் கைது செய்த போலீசார், கடத்தலுக்குப் பயன்படுத்திய கார் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
சேலம் அன்னதானப்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் யுவராஜ். இவர் தனது பெற்றோர், மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். ஆன்லைன் டிரேடிங் தொழில் நடத்தி வரும் இவருக்கு, குரங்குச்சாவடியில் சீட் கவர் கடை நடத்தி வரும் புளியம்பட்டியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் மற்றும் காடையாம்பட்டியைச் சேர்ந்த அர்ஜுனன் ஆகியோருடன் கடந்த 2 ஆண்டுகளாக நட்பு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், யுவராஜ் நடத்தி வரும் ஆன்லைன் டிரேடிங் தொழிலில் சந்தோஷ்குமார் மற்றும் அர்ஜுனன் ஆகிய இருவரும் சேர்ந்து ரூ.6 லட்சம் முதலீடு செய்ததாகக் கூறப்படுகிறது.
முதலீடு செய்த பணத்தைத் திருப்பித் தருமாறு இருவரும் பலமுறை கேட்டும், யுவராஜ் பணத்தை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ்குமார் மற்றும் அர்ஜுனன் ஆகிய இருவரும், யுவராஜ் மற்றும் அவரது குடும்பத்தினரைக் காரில் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர்களை ஒரு வீட்டில் 2 நாட்களாக அடைத்து வைத்து அடித்துத் துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும், ஒரு வார காலத்திற்குள் தங்களது பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என மிரட்டிய இருவரும், பின்னர் யுவராஜ் மற்றும் அவரது குடும்பத்தினரை மீண்டும் அவர்களது வீட்டிலேயே விட்டுச் சென்றுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த யுவராஜ், அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, சந்தோஷ்குமார் மற்றும் அர்ஜுனன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்திய கார் மற்றும் இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். நண்பர்களாக பழகியவர்களே பணத்தகராறில் யுவராஜ் மற்றும் அவரது குடும்பத்தை கடத்தி 2 நாட்களாக சித்ரவதை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்