“தண்ணீர் தொட்டியில் தனித்தனியாக கிடைத்த பெண் சடலம்” - அழுகிய நிலையில் மீட்கப்பட்ட உடல் பாகங்கள்.. வெளிவருமா கொலையின் பின்னணி?

இதையடுத்து உடல் பாகங்களை சேகரித்த போலீசார், பெண்ணின் உடலில் இடுப்பு பகுதி காணாமல் போனதை கண்டறிந்தனர்...
Salem Woman Murder
Salem Woman Murder
Published on
Updated on
2 min read

சேலம் அரிசிபாளையம் பகுதியில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில், மூன்று தண்ணீர் தொட்டிகளில் பெண்ணின் உடல் துண்டுகள் மூட்டைகளில் கட்டப்பட்டு வீசப்பட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக கல்லூரி மாணவர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் அரிசிபாளையம் குணபால ராமசாமி தெருவில் வசித்து வருபவர் ரமேஷ். இவர் அப்பகுதியில் உள்ள கோயில் ஒன்றில் பூசாரியாக பணியாற்றி வருகிறார். தனது திருமண நாளையொட்டி குடும்பத்துடன் தஞ்சாவூர் சென்றிருந்த ரமேஷ், அதிகாலை வீடு திரும்பியுள்ளார். வீட்டிற்கு வந்த பிறகு தண்ணீரை பயன்படுத்தும் போது துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த ரமேஷ், வீட்டின் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டிகளை சென்று பார்த்துள்ளார்.

அப்போது இரண்டு தண்ணீர் தொட்டிகளிலும் சந்தேகத்திற்கிடமான வகையில் மூட்டைகள் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தண்ணீர் தொட்டிகளில் இருந்த மூட்டைகளை வெளியே எடுத்து சோதனை செய்தனர். அப்போது அவற்றுக்குள் பெண்ணின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு அழுகிய நிலையில் இருப்பது தெரியவந்தது. ஒரு மூட்டையில் கை, கால்களும், மற்றொரு மூட்டையில் தலை மற்றும் உடலின் சில பாகங்களும் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து உடல் பாகங்களை சேகரித்த போலீசார், பெண்ணின் உடலில் இடுப்பு பகுதி காணாமல் போனதை கண்டறிந்தனர்.

இதனால் அந்தப் பகுதியை சுற்றியுள்ள வீடுகளின் தண்ணீர் தொட்டிகளிலும் போலீசார் தீவிரமாக சோதனை நடத்தினர். அப்போது மற்ற இரண்டு மூட்டைகள் கிடைத்த வீட்டின் பின்புறம் உள்ள கோவிந்தன் தெருவில் ஒரு வீட்டின் மாடியில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில் மேலும் ஒரு மூட்டை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மூட்டையை திறந்து பார்த்தபோது, அதற்குள் பெண்ணின் இடுப்பு பகுதி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மூன்று தண்ணீர் தொட்டிகளில் இருந்து மீட்கப்பட்ட உடல் பாகங்களையும் போலீசார் சேகரித்தனர். பெண்ணின் உடல் முழுமையாக மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர் யார் என்பது இதுவரை உறுதியாக தெரியவில்லை.

அவரது கையில் ‘கணபதி’ என்ற பெயர் பச்சை குத்தப்பட்டிருப்பது மட்டும் போலீசாருக்கு முக்கிய தடயமாக கிடைத்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு அந்தப் பெண்ணின் அடையாளத்தை கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அதில் சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அருகே வலசையூரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மனைவி தங்கமணி என்பதும் இவர் வீட்டு வேலை செய்து வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டு வேலைக்கு சென்ற தங்கமணி பிறகு வீடு திரும்பவில்லை என்பதால் இதுகுறித்து தங்கமணியின் மகள் ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

எனவே, இந்த கொலை சம்பவத்தின் பின்னணி என்ன, பெண் எப்போது கொலை செய்யப்பட்டார், உடல் பாகங்களை தண்ணீர் தொட்டிகளில் வீசியது யார், இந்த சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, இந்த கொலை வழக்கில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கல்லூரி மாணவர் ஒருவரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com